திமுகவின் ‘முற்போக்குக் கூட்டணி’ ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் அஸ்திரம்!
DMK progressive alliance is over Vijay slams progressive branding A weapon that will make the intellectuals scream
தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய அரசியல் சூழல், திமுகவுக்கு தொடர்ந்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணிக் கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக தவெக அரசுடன் இணைந்து அமைச்சரவையில் பங்கேற்று வரும் நிலையில், தற்போது திமுகவின் முக்கிய அரசியல் அடையாளமாக இருந்த “முற்போக்குக் கூட்டணி” என்ற பிராண்டிங்கையே கைப்பற்ற விஜய் தரப்பு திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பல தேர்தல்களாக திமுக தனது கூட்டணியை “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” என்ற பெயரில் மக்கள் மத்தியில் முன்னிறுத்தி வந்தது. “முற்போக்கு”, “சமூக நீதி”, “மதச்சார்பின்மை” போன்ற வார்த்தைகள் திமுக அரசியல் அடையாளத்தோடு இணைந்தவையாகவே பார்க்கப்பட்டன.
ஆனால் தற்போது அரசியல் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தவெக அரசில் நேரடியாக அமைச்சரவைப் பங்கெடுத்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் தவெக அரசுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன.
இதன் மூலம் திமுகவின் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” அமைப்பு பலவீனமடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில்தான் தற்போது தவெக தனது புதிய கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ பெயரை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் “முற்போக்கு” என்ற வார்த்தை முக்கியமாக இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
“ஜனநாயக முற்போக்குக் கூட்டணி”, “சமூக நீதி முற்போக்குக் கூட்டணி” போன்ற பெயர்கள் குறித்து தவெக தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதன் மூலம் “உண்மையான முற்போக்கு அரசியல் இப்போது தவெகவிடமே உள்ளது” என்ற பிம்பத்தை உருவாக்க விஜய் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பெரியார், அம்பேத்கர், காமராசர் போன்ற தலைவர்களின் கொள்கைகளை முன்வைத்து தவெக தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருவதால், “முற்போக்கு” என்ற அடையாளத்தை மக்கள் மத்தியில் தங்களோடு இணைக்க முடியும் என்ற நம்பிக்கை தவெக தரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், திமுகவின் அரசியல் வார்த்தைகளையும் பிராண்டிங்கையும் கைப்பற்றுவதன் மூலம், “புதிய தலைமுறை முற்போக்கு அரசியல்” என்ற முகவரியுடன் தமிழகத்தில் தங்களை நிலைநிறுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
இந்த தகவல்கள் வெளியானதையடுத்து, திமுக ஆதரவாளர்கள் மற்றும் ஐடி விங் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் எதிர்வினை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
“முற்போக்கு என்பது திமுக அரசியல் அடையாளம்” என்றும், “அதை அரசியல் ரீதியாக அபகரிக்க முயற்சி நடக்கிறது” என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் தவெக தரப்பில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
இருப்பினும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து அரசியல் ரீதியாக அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வரும் விஜய், அடுத்த கட்டமாக திமுகவின் கருத்தியல் அடையாளங்களையும் சவாலுக்கு உள்ளாக்குகிறாரா என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
DMK progressive alliance is over Vijay slams progressive branding A weapon that will make the intellectuals scream