தொடர் கொலைகள்: அமைதி பூங்காவாக இருந்த கோவை கொலை நகரமாகிறதா..?
Coimbatore is becoming a city of murders due to a series of killings
கோவையில் தொடரும் கொலைகளால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தனிமையில் வசித்து வந்த 03 மூதாட்டிகள் நகைக்காக அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தணிவதற்குள், ஒரே வாரத்தில் சிறுவன் ஒருவரும், சிறுமி ஒருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
முன்னதாக கோவை இருகூர், நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (39). இவரது, மூத்த மகன் திவிஷ் (13) ஏ.ஜி.புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 07-ஆம் வகுப்பு படித்து வந்த போது பாதியில் படிப்பை நிறுத்தினார். இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி மதியம் மாயமான சிறுவன் 18-ஆம் தேதி காலை இருகூர் தண்டவாளம் அருகே உள்ள தரைபாலம் பகுதியில் சேற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுவனுடன் மீன் பிடிக்க சென்ற அவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் 08-ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, திவிஷை முன்விரோதத்தின் காரணமாக கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
அதே போன்று, மற்றுமொரு சம்பவம் அதே நாளில் சூலூரில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடைந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்டவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் சரவணன் என்பதும், கொலை செய்தது அவருடன் வேலை பார்த்து வந்த கோகுல் (23), ஹரிஷ் (29) என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொலைகள் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவங்களின் வைத்து பார்க்கும் போது கோவை தற்போது கொலை நகரமாக மாறிவிட்டது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
English Summary
Coimbatore is becoming a city of murders due to a series of killings