ஆதாரம் போதுமா...? சட்டசபையில் ஆதாரங்களை அடுக்கி முதல்வர் விஜய் ஆவேச தாக்குதல்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலுரை வழங்கினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுப்பிய முழக்கங்களால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 18 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 3-ந்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்தனர். இதனால் சட்டசபையில் விவாதம் சூடுபிடித்தது.

“யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது”
உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை தெளிவான பதில் அளிப்பதாக தெரிவித்தார்.மேலும், தான் அவையில் இல்லாத நேரத்திலும் யார் என்ன கேள்விகளை எழுப்புகிறார்கள் என்ற தகவல் தனக்கு கிடைக்கும் என்றும், அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் கூறினார். அதேசமயம், தான் பதிலளிக்கும்போது தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் எழுந்து வெளியேறிவிடக்கூடாது என்றும் கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறினார்.

இன்று தொடங்கிய விஜயின் பதிலுரை
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கத் தொடங்கினார். அவரது உரையை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

“அமைதியே மாநில வளர்ச்சியின் அடித்தளம்”
தனது பதிலுரையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கூறியதாவது,“ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் காவல்துறை முக்கியமான அடித்தளமாக உள்ளது. மாநிலத்தில் அமைதி நிலவினால்தான் முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் மட்டுமே தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்.அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவரது பெயர் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும்போது, அதன் தாக்கம் அவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் பாதிக்கிறது. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நேர்மையை கடைப்பிடித்து, தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.அதேவேளை, ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்களுக்கான சட்டப்பூர்வ கடமைகளை எவ்வித தயக்கமும் இன்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் த.வெ.க. அரசு எந்த சமரசத்திற்கும் இடமளிக்காது” என்று தெரிவித்தார்.

“போதைக்கு எதிரான போர் தொடரும்”
தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய முதல்-அமைச்சர், கடந்த கால ஆட்சியாளர்களால் போதைப்பொருள் கலாசாரம் உரிய முறையில் கவனிக்கப்படாததால், தற்போது அது வேரூன்றியுள்ளதாக தெரிவித்தார்.போதைப்பொருள் பயன்பாடு தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.இதற்காக தனியாக போதைப்பொருள் தடுப்புப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை போதை என்ற மரத்தின் சில கிளைகள் மட்டுமே வெட்டப்பட்டுள்ளதாகவும், அதன் வேரையே அகற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். இந்தப் பணி ஒரே நாளிலோ அல்லது 100 நாட்களிலோ முடிந்துவிடாது என்றும் தெரிவித்தார்.மாநிலத்தின் 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு “சிங்கப்பெண்” படை
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.இதற்காக 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.357 கோடி மதிப்பிலான நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நடவடிக்கைகளின் மூலம் 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளனர். 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், 21 குழந்தை திருமணங்களும் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காவல் மரணங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரம்
காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் இழப்பு மட்டுமல்ல; காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினை என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.எனவே, காவலில் மரணம் ஏற்படும் ஒவ்வொரு சம்பவத்திலும் வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் சட்டப்படியான விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் தெரிவிக்கப்படுவதுடன், மருத்துவ உடற்கூராய்வு மற்றும் நீதித்துறை நடுவர் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.தவறு செய்தவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படாது என்றும், யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் அவர் கூறினார்.காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் கண்காணிப்பு கேமராக்கள், பயிற்சி, மருத்துவப் பரிசோதனை, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

“வன்ம நதி ஓடுகிறது”
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாசமும் வன்மமும் நிறைந்த கருத்துகள் பரவி வருவதாக முதல்-அமைச்சர் குற்றம்சாட்டினார்.அரசியல் ரீதியாக கருத்துகளை தெரிவிக்கலாம் என்றாலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை அனுமதிக்க முடியாது என்றும், பெண்களைப் பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் தெரிவித்தார்.மேலும், ஒரு உறுப்பினர் “எலும்பை உடைப்பேன்” என்று பேசியதை சுட்டிக்காட்டிய அவர், “அவர் என்ன எலும்பு மருத்துவரா?” என்று கேள்வி எழுப்பினார்.தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவு வராது என்று ஒருவர் பேசியதாகவும் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற பேச்சுகளால்தான் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதாக விமர்சித்தார். மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“ஒரு சாம்பிளை பார்க்கலாமா?”
தி.மு.க.வினர் தனது மேஜையில் இருந்த மூன்று கோப்புகளை திறந்து காட்டுமாறு கேட்டதாகக் கூறிய முதல்-அமைச்சர், அதில் ஒரு கோப்பை எடுத்துக்கொண்டு சில குற்றச்சாட்டுகளை அவையில் முன்வைத்தார்.கடந்த ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை தெரிவித்ததாகக் கூறப்படும் விவரங்களை சுட்டிக்காட்டிய அவர், வீராணம் குழாய் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும், டெண்டர் வழங்குவதில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பல்வேறு விவகாரங்களில் கமிஷன் பெறப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.“இதற்கான ஆதாரங்கள் கேட்கப்பட்டால், அவை சட்டசபை நூலகத்திலேயே உள்ளன. அருகிலேயே ஆதாரம் இருக்கும்போது அதை வெளியில் தேடுகின்றனர்” என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

கட்சி நிதி குறித்தும் குற்றச்சாட்டு
கட்சி நிதி தொடர்பான விவகாரத்திலும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.கட்சி நிதியாக 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், மதுபான விற்பனை தொடர்பான விவகாரத்தில் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கட்சி நிதி தொடர்பான விவகாரத்தில் முக்கிய நபர்களாக மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.“தி.மு.க. இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது என்கிறார்கள். நான் சொல்கிறேன்; தி.மு.க. இருக்கும் இடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்கும் இடத்தில் தி.மு.க. இருக்கும்” என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

“ஆதாரம் போதுமா?”
தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சுட்டிக்காட்டிய முதல்-அமைச்சர், தவறு செய்து சிக்கிக் கொள்பவர்கள் ஒரு வகை என்றும், தவறு செய்துவிட்டு அது தெரியாத வகையில் செயல்படுபவர்கள் மற்றொரு வகை என்றும் குறிப்பிட்டார்.இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வினர் என அவர் விமர்சித்தார். ஊழல் என்ற வார்த்தை வந்தாலே தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நிற்பதாகவும், ஆனால் ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.மிசா காலத்தைப் பற்றி பேசும் அவர்கள், சட்டம்-ஒழுங்கு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பு தங்கள் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.

“இறைவனும் இயற்கையும் நமது பக்கம்”
அண்ணா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகியோருடன் தனது பெயரையும் குறிப்பிட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இயற்கையும் இறைவனும் தங்கள் பக்கம் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.அன்புக்கு முன்பாக எதிரிகள் தோற்பது உறுதி என்றும், பதவி அல்லது அதிகாரத்திற்காக தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறிய அவர், மக்களுக்கு நல்லது செய்வதற்காகவும், நன்றிக்கடனை நிறைவேற்றுவதற்காகவும் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்தார்.

மானியக் கோரிக்கைகளை ஏற்க வேண்டுகோள்
சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 22-ம் எண் காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான தீர்மானங்களை படித்துப் பார்த்ததாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.அவை விதிகளுக்கு உட்பட்டவையாகவும், அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப செயல்படுத்தக்கூடியவையாகவும் இருக்கும் பட்சத்தில், அரசு அவற்றை கனிவுடன் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்.எனவே, தனது பதிலுரையில் வழங்கப்பட்ட விளக்கங்களை ஏற்றுக்கொண்டு உறுப்பினர்கள் தங்களது வெட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை பேரவை தலைவர் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படைகள் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

பதிலுரையின்போது தி.மு.க. அமளி
முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருந்தபோதே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பியதுடன், தங்களுக்கும் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனால் சட்டசபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த அமளிக்கு இடையிலும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

தி.மு.க. உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கண்டனம்
தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை கண்டித்தார்.“முதல்-அமைச்சர் எப்போது பதில் அளிப்பார் என்று நீங்கள் கேட்டீர்கள். அதன்படி இன்று அவர் தனது பதிலுரையை வழங்கியுள்ளார். பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து அவர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.மக்கள் மன்றத்தின் முன்பு முதல்-அமைச்சரின் பதிலுரை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது, எனது அனுமதியின்றி பதாகைகளை கொண்டு வந்து காட்டுவதும், தொடர்ந்து முழக்கங்களை எழுப்புவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.முதல்-அமைச்சரின் பேச்சை வெளியே செல்லவிடாமல் தடுப்பதே உங்கள் நோக்கமாக இருந்திருந்தால், அதை நான் ஏற்க முடியாது. நீங்கள் தொடர்ந்து குரல் எழுப்பியபோதிலும், முதல்-அமைச்சர் தனது பதிலுரையை முழுமையாக நிறைவு செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் எப்போது பேசுவார் என்று கேட்ட நீங்கள், அவர் பதிலளிக்கும் நேரத்தில் அமைதியாகக் கேட்டிருக்க வேண்டும். உங்கள் விளக்கத்தை தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் இருந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை நீங்கள் தவறவிட்டுள்ளீர்கள்.இந்த அவையில் முதல்-அமைச்சர் பேசும்போது ஆரம்பம் முதலே கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியது தவறு. பதாகைகளை கொண்டு வந்து காட்டுவதற்கான இடம் இது அல்ல. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதல்-அமைச்சரின் பதிலுரை நிறைவடைந்துவிட்டது” என்று சபாநாயகர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the evidence enough Chief Minister Vijay launches furious attack by laying out evidence Assembly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->