கலைஞர் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு பெண் அரசியலுக்கு வருகிறாரா? கனிமொழிக்கு பின் மு.க.அழகிரி மகள் கயல்விழி என்ட்ரி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்று கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பம். பல தசாப்தங்களாக தமிழ்நாடு அரசியலில் இந்த குடும்பம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கலைஞர் கருணாநிதி மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், தற்போதைய எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தவர்கள். பெண்களில் கனிமொழி மட்டுமே அரசியலில் செயலில் உள்ளார். அவர் திமுக துணைப் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கலைஞர் குடும்பத்திலிருந்து மீண்டும் ஒரு பெண் அரசியலுக்கு வரக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அந்த பெயர் வேறு யாருமில்லை; திமுகவில் இருந்து பல ஆண்டுகளாக ஒதுங்கி இருக்கும் கலைஞரின் மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகள் கயல்விழி என்பதாக கூறப்படுகிறது.

கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. இதில் செல்வி மற்றும் தமிழரசு அரசியலில் பெரிதாக ஈடுபடவில்லை. கலைஞரின் மற்றொரு துணைவியாரான ராசாத்தி அம்மாளின் மகள்தான் கனிமொழி.

கலைஞர் அரசியல் உச்சத்தில் இருந்த காலத்தில், டெல்லியில் முரசொலி மாறன், சென்னையில் மு.க.ஸ்டாலின், மதுரையில் மு.க.அழகிரி என குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு பரவியிருந்தது. பின்னர் முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு அவரது மகன் தயாநிதி மாறன் அரசியலில் முக்கிய நிலையைப் பெற்றார்.

இதே காலகட்டத்தில் கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்ற விவாதம் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே உருவானது. ஒரு பிரபல பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு இருப்பதாக வெளியானதையடுத்து, அந்த பத்திரிகையின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கலைஞர் மற்றும் அழகிரி இடையே மோதல் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு கலைஞர் மறையும் வரை அவர் கட்சிச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின் திமுகவின் முக்கிய முகமாக முன்னிறுத்தப்பட்டார்.

கலைஞர் மறைவுக்குப் பிறகும் அழகிரி திமுகவில் மீண்டும் சேரவில்லை. அவரை ஆதரித்த பலரும் பின்னர் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும், அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இந்த சூழலில், தற்போது அழகிரியின் மகள் கயல்விழி அரசியலுக்கு வரக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. சமீப காலமாக அவர் சில ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். தனது தந்தை மு.க.அழகிரி தென்மாவட்டங்களில் வைத்திருந்த செல்வாக்கு, அவர் வெற்றி பெற்ற தேர்தல்கள் போன்றவற்றையும் அவர் பேட்டிகளில் குறிப்பிடுகிறார்.

மேலும், அழகிரி வெற்றி பெற்ற தொகுதிகளில் பின்னர் திமுக வெற்றி பெற முடியாதது, திருமங்கலம் பார்முலா போன்ற அரசியல் சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டி பேசுகிறார்.

தற்போதைய நிலையில் கயல்விழி அரசியலுக்கு வருவது உறுதியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சில திமுக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதனால், எதிர்காலத்தில் கலைஞர் குடும்பத்தின் அடுத்த தலைமுறை அரசியலில் கயல்விழியும் களமிறங்குவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is another woman from the Kalaignar family entering politics After Kanimozhi MK Azhagiri daughter Kayalvizhi enters


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->