தூத்துக்குடி லாக்-அப் மரண வழக்கில் திருப்புமுனை... உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை தொடக்கம்...!
Turning point Thoothukudi lock up death case Postmortem examination deceased youth begins
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவரது உடலுக்கு நீதிமன்ற உத்தரவின்படி இன்று முழுமையான காணொளிப் பதிவுடன் உடற்கூராய்வு நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் மீது, கடந்த 17-ம் தேதி மதுவிலக்கு அமலாக்கச் சோதனையின்போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, அன்று மாலை மருத்துவப் பரிசோதனைக்காக அருணாசலத்தை காவலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் அளவுக்கு அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவச் சான்றிதழில் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர், அருணாசலம் மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய அறையில் வைக்கப்பட்டார்.
அப்போது மற்ற கைதிகளுடன் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயங்கி கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தக் காட்சி காவல் நிலையத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாசலத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி கடந்த 23-ம் தேதி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக அருணாசலத்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், காவல் நிலையத்தில் அருணாசலம் மயங்கி விழும் காட்சிகள் வெளியான நிலையில், அவரது குடும்பத்தினரிடம் குற்றவியல் நடுவர் விஜயராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி அருணாசலத்தின் உடலுக்கு இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு தொடங்கியது. குற்றவியல் நடுவர் முன்னிலையில் 3 மருத்துவர்கள் உடற்கூராய்வு மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, உடற்கூராய்வு நடவடிக்கைகள் முழுவதும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
English Summary
Turning point Thoothukudi lock up death case Postmortem examination deceased youth begins