நீட் வினாத்தாள் கசிவுக்குப் புதிய சட்டம்...! பிரதமர் மோடி அதிரடி...! - மத்திய கல்விச் செயலாளர்கள் திடீர் மாற்றம்...!
New law NEET question paper leak Prime Minister Modi takes action Sudden change Central Education Secretaries
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள காணொளியில் அவர் தெரிவித்திருப்பதாவது,"வினாத்தாள் கசிவு என்பது சாதாரணமான பிரச்சினை அல்ல.

லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் மிகுந்த வேதனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க கடந்த இரண்டரை மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குற்றத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் தங்களது கல்வியாண்டை இழக்கக் கூடாது என்பதற்காக, 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கான தேர்வுகளை விரைந்து நடத்த அரசு முழு முயற்சி மேற்கொண்டது. மேலும், வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும். அமைச்சர்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் புதிய மசோதாவுக்கு இறுதி வடிவம் அளிக்கப்படும். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதும், இந்த மசோதாவை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் முக்கிய கோரிக்கையான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் மாற்றமில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.இதற்கிடையில், மத்திய அரசு கல்வித்துறையில் முக்கிய நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த வினீத் ஜோஷி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய உயர்கல்வித்துறை செயலாளராக நரேஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக டி.கே. அனில் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்க டெல்லியில் தனி விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட உள்ளன. முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு சி.பி.ஐ. நீதிபதியாக அனு குரோவர் பாலிகாவை நியமித்து, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா உத்தரவிட்டுள்ளார்.
English Summary
New law NEET question paper leak Prime Minister Modi takes action Sudden change Central Education Secretaries