பிரபல நடிகை கடத்தல் வழக்கு! குற்றவாளிகள் சலீம், பிரதீப் மனுக்கள் தள்ளுபடி... கேரளா உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு...!
Famous actress kidnapping case Petitions convicts Salim Pradeep dismissed Kerala High Court dramatic verdict
கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு, ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் தண்டனை பெற்ற இரு குற்றவாளிகளின் 20 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்ற பிரபல நடிகை கடத்தப்பட்டு, காருக்குள்ளேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

இந்த வழக்கில் 5-வது மற்றும் 6-வது குற்றவாளிகளான சலீம், பிரதீப் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.தங்களது மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதால், அதுவரை சிறைத் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.இந்த வழக்கில் குற்றத்தின் தீவிரம், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், பொதுநலன் மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆறு குற்றவாளிகளும் இணைந்து சதித்திட்டம் தீட்டி, அதை திட்டமிட்டபடி செயல்படுத்தியதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் ஒரே நோக்கத்துடன் குற்றச் செயலுக்கு உதவியதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவான சட்டப்பிழையோ, சட்டமீறலோ இருப்பதை மனுதாரர்கள் நிரூபிக்கத் தவறியுள்ளதால், தண்டனையை நிறுத்திவைக்க முடியாது எனக் கூறி இருவரின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, கடந்த ஜூலை 9-ம் தேதி இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ‘பல்சர் சுனி’யின் தண்டனையையும் நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுத்திருந்தது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Famous actress kidnapping case Petitions convicts Salim Pradeep dismissed Kerala High Court dramatic verdict