'தவறு செய்ய மாட்டேன்...செய்யவிடவும் மாட்டேன்'...! - ஊழல் மற்றும் அதிகார மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்யின் கறார் பேச்சு...!
I not make mistake and I not let anyone make mistake Vijay decisive speech that put end corruption and intimidation power
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மக்கள் பெருங்கடலின் மத்தியில் உணர்ச்சிமிக்க உரையாற்றிய விஜய், “என் இதயத்தில் இடம்பிடித்த தமிழ்நாட்டு மக்களே, உங்களுக்கெல்லாம் என் அன்பும் மரியாதையும் நிறைந்த வணக்கம்” என்று தொடங்கினார்.இதைத் தொடர்ந்து பேசிய அவர், “திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் போராடிய ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகன்தான் நான். பசி என்ன, வறுமை என்ன, வாழ்க்கையின் காயம் என்ன என்பதனை நேரில் அனுபவித்தவன்.

அரச மரபில் பிறந்தவன் அல்ல; உங்களுள் ஒருவன். உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், உங்கள் உறவினன் என்ற உணர்வோடு தான் நான் இங்கு நிற்கிறேன். அதனால்தான் என்னை இந்த உயர்ந்த இடத்தில் அமரவைத்துள்ளீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.“உங்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த என்னை, ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று தோள்கொடுத்து தாங்கினீர்கள்.
அவமானங்களையும் சோதனைகளையும் பொருட்படுத்தாமல், என்னுடன் உறுதியாக நின்று இன்று ‘சி. ஜோசப் விஜய்’ என்ற பெயரை அரசியல் வரலாற்றில் பதிய வைத்திருக்கிறீர்கள்” என்று உருக்கமாக தெரிவித்தார்.மேலும், “என்னால் செய்ய முடியும் விஷயங்களை மட்டுமே செய்வேன். வெறும் வார்த்தைகளால் மக்களை ஏமாற்ற மாட்டேன்.
ஆனால், இத்தனை கோடி மக்கள் என்னுடன் தோளோடு தோள் நின்றிருக்கும்போது, எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தைரியம் எனக்குள் உருவாகியுள்ளது” என்று நம்பிக்கையுடன் பேசினார்.தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து பேசிய அவர், “மாநிலத்தின் நிதிநிலை மிகவும் சிக்கலான சூழலில் உள்ளது.
பத்து லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை தமிழகத்தின் தோளில் ஏற்றப்பட்டுள்ளது. ஆட்சியின் உள்ளே சென்று பார்த்த பிறகே உண்மையான நிலை முழுமையாக புரிகிறது. அதனை மக்களுக்கு வெளிப்படையாக எடுத்துரைக்கும் வகையில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, மக்கள் நலத் திட்டங்கள் குறித்து உறுதியளித்த அவர், “பெண்களின் பாதுகாப்பு எங்கள் அரசின் முதன்மை பொறுப்பு.
இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்போம். நண்பர்களாக இருந்தாலும், அரசியல் எதிரிகளாக இருந்தாலும், 8 கோடி தமிழர்களும் என் மக்கள் தான்” என்று உறுதிபட கூறினார்.மேலும், “ரேஷன் பொருட்கள், மருத்துவ வசதி, குடிநீர் திட்டங்கள், சாலை மேம்பாடு போன்ற அடிப்படை தேவைகளில் முழு கவனம் செலுத்தப்படும். மக்களின் வரிப்பணத்தில் ஒரு காசு கூட தவறாக பயன்படுத்தப்படாது.
விஜய் தவறு செய்ய மாட்டான்; தவறு செய்யவும் விடமாட்டான். என்னுடன் இருப்பவர்கள் என்ற பெயரில் யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்ய நினைத்தால், இப்போதே விலகிச் செல்லலாம். இந்த ஆட்சியில் ஒரே அதிகார மையம் மக்கள் மட்டுமே” என்று அதிரடியாக தெரிவித்தார்.
விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், சிறுபான்மை சமூகங்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சமத்துவமான ஆட்சி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.இறுதியாக குழந்தைகளை நினைவுகூர்ந்த விஜய், “என் குட்டி நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என் அன்பான நன்றிகள்.
உங்களுக்காக நல்ல எதிர்காலத்தை உருவாக்க விஜய் மாமா முழு முயற்சியும் எடுப்பான்” என்று பாசமுடன் தெரிவித்தார்.தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் ஆதரவு வழங்கிய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்த அவர், “இது வெறும் ஆட்சியின் தொடக்கம் அல்ல; புதிய தமிழ்நாட்டின் பிறப்பு. இனியும் தொடர்ந்து மக்களோடு சந்தித்து பேசுவேன்” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
I not make mistake and I not let anyone make mistake Vijay decisive speech that put end corruption and intimidation power