தமிழகத்தில் ஹிந்தியை தடை செய்ய மசோதா தாக்கலா? உண்மை என்ன? தமிழக அரசு தரப்பில் விளக்கம்!
hindi ban TN Govt
தமிழக சட்டமன்றத்தில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தி மொழியைத் தடை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்” என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால், இது முழுமையாக தவறானதும் ஆதாரமற்றதுமாகும். அத்தகைய எந்த மசோதாவுக்கும் முன்மொழிவு கிடைக்கவில்லை என சட்டமன்ற செயலர் தெளிவுபடுத்தியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இத்தகைய வதந்திகளை பரப்பாதீர்கள். அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மட்டுமே நம்பிக்கை வையுங்கள்” எனவும் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் வேகமாக பரவி வரும் சூழலில், அரசு வெளியிட்ட இந்த விளக்கம் குழப்பத்தைத் தவிர்த்துள்ளது.