காணாமல் போன அமமுக எம்.எல்.ஏ!வர் நைட்டில் கண்டுபிடித்த ஆளுநர் அர்லேகர்.. என்ன நடந்தது?
Governor Arlekar found the missing AMMK MLA at night What happened
தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவை திரட்டும் பணியில் தவெக ஈடுபட்டிருந்தபோது, அமமுக எம்.எல்.ஏ காமராஜின் ஆதரவு கடிதம் தொடர்பான விவகாரம் பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியது. தற்போது அந்த விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளன.
தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்தித்தபோது சமர்ப்பித்த ஆதரவு பட்டியலில், அமமுக எம்.எல்.ஏ காமராஜின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. அதோடு, அவர் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்பட்ட கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் வெளியானதும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் அதிருப்தி அடைந்தார். உடனடியாக ஆளுநரை சந்தித்த அவர், “எங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை. அவர் கொடுத்ததாக காட்டப்படும் கடிதம் போலியானது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அவர் கொடுத்த உண்மையான கடிதம் எங்களிடம் உள்ளது” என்று புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தவெக தரப்பினர் காமராஜை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் தினகரன் குற்றம்சாட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஆளுநர் அர்லேகர், தமிழக காவல்துறை உயரதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. உளவுத்துறை மூலம் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், காமராஜ் புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ஒரு ரிசார்ட்டில் இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து உளவுத்துறையினர் காமராஜை சந்தித்து, ஆளுநரின் உத்தரவை தெரிவித்ததாகவும், பின்னர் அவரை லோக் பவனுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கு ஆளுநர் அர்லேகர், காமராஜிடம் நேரடியாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விசாரணையில், “தவெக தரப்பினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை, தவெகவுக்கு ஆதரவு அளித்தால் அரசியல் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினர். அதன்பிறகு அவர்கள் கொடுத்த கடிதத்தில் நான் கையெழுத்திட்டேன்” என்று காமராஜ் விளக்கம் அளித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்குப் பிறகு, காமராஜை டிடிவி தினகரனிடம் ஆளுநர் தரப்பு ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் “குதிரை பேரம்” குற்றச்சாட்டாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காமராஜின் விளக்கத்தை அடிப்படையாக கொண்டு ஆளுநர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதனை திமுக மற்றும் அதிமுக தரப்புகள் கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Governor Arlekar found the missing AMMK MLA at night What happened