வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்..மோடி மட்டும் மனசு வச்சா போதும்.. தங்கத்தின் விலை சட்டென சரியும்! எப்படி தெரியுமா?
Gold is at an all time high if Modi just changes his mind the price of gold will suddenly drop How do you know
தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.9,500 உயர்ந்த நிலையில், தங்கம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலையேற்றம் பொதுமக்களையும், நகை வியாபாரிகளையும் ஒரே நேரத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அரசு மனது வைத்தால், தங்கத்தின் விலை ஓரளவு குறைய வாய்ப்பு இருப்பதாக நகைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல; அது சேமிப்பின் அடையாளமாகவும், அவசர தேவைகளுக்கான நிதி ஆதாரமாகவும் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணம், சுபநிகழ்ச்சிகள், குழந்தைகளின் எதிர்காலம் என குடும்ப வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் தங்கமும் வெள்ளியும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன.
ஆனால் சமீபகாலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிக் கொண்டே இருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது ரூ.1.22 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-ஐ கடந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் வேகமாக உயர்ந்து, ஒரு கிலோ ரூ.4 லட்சத்தையும், ஒரு கிராம் ரூ.400-ஐயும் தொட்டுள்ளது. இந்த போக்கு தொடர்ந்தால், ஆண்டின் இறுதிக்குள் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சம் வரை உயரலாம் என்றும், வெள்ளி கிலோ ரூ.5 லட்சத்தை நெருங்கலாம் என்றும் நகைத் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கின்றனர்.
விலையேற்றம் காரணமாக தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதுடன், நகை வியாபாரிகளின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதே இதற்கான முக்கிய காரணமாகும். உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலரை நெருங்கி வருகிறது. இதனுடன் இந்தியாவில் தங்க இறக்குமதிக்கு 6 சதவீத சுங்க வரியும், 3 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படுவதால், தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விடுகிறது என நகை வியாபாரிகள் விளக்குகின்றனர்.
இந்த நிலையில், தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகவும், ஜிஎஸ்டியை 3 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகவும் குறைத்தால், ஒரு பவுன் தங்கத்தின் விலை குறைந்தது ரூ.6,000 முதல் ரூ.6,500 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் கணிக்கின்றனர்.
இன்றைய சூழலில் தங்கம் மெதுவாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கைகளில் இருந்து விலகி வருவது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என நகைத் துறையினர் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையே, நகை வியாபாரிகள் எதிர்கொள்ளும் இன்னொரு பெரிய சிக்கல் வரி கட்டமைப்பாக உள்ளது. விற்பனை செய்யப்படாத நகைகளுக்கே கூட, ஆண்டு முடிவில் மொத்த இருப்பை கணக்கிட்டு 31.5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு பவுனுக்கு சராசரியாக ரூ.29,000 வரை வரி சுமை இருப்பதாகவும், ஒரு கடையில் 10 கிலோ தங்க நகை இருந்தால் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை வரி கட்ட வேண்டிய சூழல் உருவாகுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை நீடித்தால், சிறு மற்றும் நடுத்தர நகை வியாபாரிகள் தொழிலைத் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், இதற்கும் உடனடி தீர்வு தேவை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். மொத்தத்தில், சர்வதேச சந்தை நிலவரம், டாலர்–ரூபாய் மாற்று விகிதம் மற்றும் மத்திய அரசின் வரி கொள்கைகள் சாதகமாக மாறினால்தான் தங்கம் விலை குறையும். அதுவரை, தங்கம் பொதுமக்களுக்கு எட்டாக்கனியாகவே தொடரும் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Gold is at an all time high if Modi just changes his mind the price of gold will suddenly drop How do you know