கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஜி கே வாசன் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதை கண்டித்தும், இது போன்ற செயல் தொடராமல் இருப்பதற்கும், தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடாமல் உடனடியாக தமிழகத்திடம் ஒப்படைக்கவும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்கியதும், மீன்பிடிச்சாதனங்களை அபகரித்து சென்றதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. நாகப்பட்டின மீனவர்கள்  வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்கள் மீது இரும்பு கம்பி, அரிவாள், ரப்பர் கட்டை ஆகியவற்றால் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் மீனவர்களின் வலை, பேட்டரி, செல்போன், ஜி.பி.எஸ். , வாக்கி டாக்கி, டீசல் போன்றவற்றை அபகரித்துச் சென்றனர். காயமடைந்த மீனவர்கள் வேதாராண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து விரைவில் குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடிக்கும்போதே இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அச்சுறுத்துவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மத்திய அரசு, இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இது போன்ற செயல் தொடரக்கூடாது என்பதையும் வலியுறுத்த வேண்டும். 

மேலும் ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை அரசு பறிமுதல் செய்த நாட்டுப்படகு, விசைப்படகு என 105 படகுகளை பிப்ரவரி 7 முதல் 5 நாட்களுக்கு ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு அறிவித்ததையும் மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.
ஒரு புறம் இந்திய அரசு தமிழக மீனவர்களை விடுவிக்க பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்போவதாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல, நியாயமற்றது.
அது மட்டுமல்ல இந்திய மீனவர்களை அச்சுறுத்தும் விதமாகவும், இந்திய நாட்டை அலட்சியப்படுத்தும் விதமாகவும் அமைகிறது இலங்கை அரசின் ஏலம் விடும் அறிவிப்பு.

குறிப்பாக இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து பல வழிகளில் உதவிகள் செய்து வரும் வேளையில் தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்கவும், மீனவர்களின் அனைத்துப் படகுகளை உடனடியாக ஒப்படைக்கவும் இந்திய அரசு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan statement on jan 24


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->