ஆட்டம் ஆட வேண்டியது மைதானத்தில்...அறையில் அல்ல...! பெரும்பான்மையை பேரவையில் நிரூபியுங்கள்...! - கமல்ஹாசன் அதிரடி முழக்கம்
game should be played field not room Prove majority assembly Kamal Haasan slogan
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தனது எக்ஸ் தளப் பதிவில் தமிழக அரசியல் சூழலைக் குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் முழுமையான அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை என்றும், இது தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன் நிகழாத தனித்துவமான தீர்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்; பொறுப்புணர்வுள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” என்று தெரிவித்திருப்பது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாகும் எனக் கூறிய கமல்ஹாசன், அந்த அரசியல் முதிர்ச்சியை தாம் மதிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், தற்போது அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பில் இருப்போரும் தங்களுக்குரிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றும், இது ஒரு அரசியல் கோரிக்கை அல்ல; அரசியலமைப்பின் அடிப்படை பொறுப்பை நினைவூட்டும் ஜனநாயகக் குரலாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்வது தமிழக மக்களின் ஜனநாயக ஆணையை அவமதிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 233 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது மாநிலத்தின் கண்ணியத்திற்கே களங்கமாகவும், மக்களாட்சியின் உயிர்மூச்சையே பாதிக்கும் நிலையாகவும் மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும்; ஆளுநர் மாளிகையில் அல்ல” என்று எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பதையும் கமல்ஹாசன் நினைவுகூர்ந்துள்ளார்.
இது வெறும் கட்சிசார் அரசியல் கருத்தல்ல; ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஓர் இந்தியக் குடிமகனின் மனச்சாட்சி குரலாகும் என்றும், தமிழக மக்களின் தீர்ப்புக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாத ஜனநாயகப் பொறுப்பாகும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
game should be played field not room Prove majority assembly Kamal Haasan slogan