முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் மறைவு!
Former MLA Sundhar Rajan passed away
மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட சுந்தர்ராஜன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அவர் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த அவர் அக்கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தார். பின்னர் தேமுதிக எம்எல்ஏக்கள் தேமுதிக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அதிமுகவில் இணைந்த போது அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த சுந்தர்ராஜன் அதிமுக ஆதரவு எம்எல்ஏவாக மாறினார்.

2015ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் எம்எல்ஏ பதவியை இழந்த போது, ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆவதற்கு தன்னுடைய தொகுதியை விட்டு தருகிறேன் என சுந்தர்ராஜன் கூறியிருந்தார். அதனை அடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனையடுத்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் தனது நண்பர் விஜயகாந்தை சந்தித்து பேச வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
English Summary
Former MLA Sundhar Rajan passed away