''Gainer-ஆ loser-ஆ என்பதை அவர்தான் தான் முடிவு செய்ய வேண்டும்''; விஜய்யின் கூட்டணி நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து..!
Former Minister Jayakumar states that Vijay would be a gainer if he were to join the AIADMK alliance
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக விஜய் மற்றும் நாதக சீமான் ஆகியோர் களத்தில் உள்ளனர். இதனால் நான்கு முனை போட்டி உள்ளது.
இந்த சூழலில் தவெக தலைவர் விஜய்யை, என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்க முயற்சி என தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த சனிக்கிழமை திடீரென தவெக மாவட்டச் செயலாளர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் கூட்டினார். அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் என்.டி.ஏ. கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
அடுத்தநாள் ஞாயிறு அன்று, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பில் சிபிஐ விசாரணை முடிந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். அதன் பின்னர் கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சி நிர்வாகி நிர்மல் குமார், “பாஜக, அதிமுக அல்லது சசிகலா, ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.'' என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ''கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதான வாய்ப்பும், சூழலும் இருக்கிறது. அதிமுகவும், என்.டி.ஏ. கூட்டணி தலைவர்களும் தவெகவுடன் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை'' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், சென்னையில் செய்தியாளர்கள், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''எங்கள் பொதுச் செயலாளர் அப்படியான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என தெளிவுப்படுத்திவிட்டார். இருந்தாலும், அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் அவர் Gainer; இல்லையென்றால் loser. Gainer-ஆ loser-ஆ என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Former Minister Jayakumar states that Vijay would be a gainer if he were to join the AIADMK alliance