ஹோர்முஸ் நீரிணையை அடுத்தடுத்து கடக்கும் இந்திய கப்பல்கள்; மத்திய அரசின் முயற்சி வெற்றி..!
Indian Ships Cross the Strait of Hormuz in Succession
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைத்து போர் தொடுத்த நிலையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலின் எதிரொலியாக ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் முக்கிய கடல் மார்க்கமாக இந்த ஹோர்முஸ் நீரிணை திகழ்கிறது. இந்த ஹோர்முஸை கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்கி அழிப்போம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், இந்தியாவுக்கு சரக்கு கப்பல்கள் வராமல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில், ஈரான் அதிபர் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது இந்தியாவுக்கு எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அப்பாசியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து 04 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் விளைவாக இந்தியாவின் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு கப்பல்களை, ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கியது. அதில், ஷிவாலிக் கப்பல் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலில் 55 ஆயிரம் டன் சமையல் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து நந்தா தேவி கப்பலில் 46 ஆயிரம் டன் எரிவாயு கொண்டு வரப்படும் நிலையில், அந்த கப்பல் செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
English Summary
Indian Ships Cross the Strait of Hormuz in Succession