எங்கள் மண்ணைக் காக்கும் போர்க்குணம் நமக்கே உரியது'...! - கொள்கை முழக்கமிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...!
fighting spirit protect our land belongs us DMK leader MK Stalin who gave policy slogan
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் தடையாக நிற்காது” என்ற எனது நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதேபோன்று சட்டமன்றத்தில் உள்ள எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்து ஜனநாயக மரபை காக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி உருவாகக் கூடாது என்ற அரசியல் பொறுப்புணர்வின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.ஆனால் இந்த ஆட்சியை உருவாக்க வழிவகுத்த மக்களின் நம்பிக்கையையே சிதைக்கும் அரசியல் செயல்பாடுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது. அதற்கு கடந்த மூன்று நாட்களாக ஆளுங்கட்சியின் நகர்வுகளும், அதுகுறித்து எங்கள் தோழமைக் கட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துகளும் சாட்சியமாக அமைந்துள்ளன.
ஆட்சி நீடிக்க தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்கங்களின் நிலைப்பாட்டால் உறுதியாக இருந்தபோதிலும், தற்போதைய ஆளுங்கட்சி அதிகார அரசியலின் ஆபத்தான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
“தூய்மையான அரசியல்” என முழங்கியவர்கள் இன்று மறைமுக அரசியல் வியூகங்களில் இறங்கியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிளவுபட்ட அ.தி.மு.க. அணிக்குள் குழப்பத்தை பயன்படுத்தி, உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
“தொடக்கமே இவ்வாறு இருந்தால், ஆட்சியின் முடிவு எப்படியிருக்கும்?” என்ற கேள்வியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்த மக்களே எழுப்பும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.மாண்புமிகு முதல்-அமைச்சரே, உங்கள் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் மக்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக பிளவுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அரசியல் கைம்மாறுகள் என்ன என்பதையும் மக்கள் கவனித்து வருகிறார்கள்.திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, எப்போதும் போல தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
fighting spirit protect our land belongs us DMK leader MK Stalin who gave policy slogan