“இனி பேட்டி கொடுக்க மாட்டேன்”! கூலி படம் கொடுத்த ஒற்றை தோல்வி..லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு?
I will not give interviews anymore Lokesh Kanagaraj sudden decision after the single failure of the film Coolie
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற தொடர் வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்த அவர், சமீபத்தில் இயக்கிய ‘லியோ’ மற்றும் ‘கூலி’ திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்தார்.
குறிப்பாக விஜய்யை வைத்து இயக்கிய ‘லியோ’ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தின. அதேபோல் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.
இந்த இரண்டு படங்களும் லோகேஷ் கனகராஜின் வழக்கமான “அதிக வன்முறை + கடத்தல் + LCU ஸ்டைல்” ஃபார்முலாவையே தொடர்ந்து பயன்படுத்தியதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், அடுத்தடுத்த படங்களில் லோகேஷ் புதிய முயற்சிகளை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
தற்போது லோகேஷ் கனகராஜ், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் இயக்க தயாராகி வருகிறார். இதேவேளை, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘DC’ திரைப்படத்தில் நடிகராகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், லோகேஷின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான ரத்னகுமார் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது:“29-வது படம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, லோகேஷ் என்னிடம் ‘இனி நான் பேட்டி கொடுக்கப்போவதில்லை’ என்று சொன்னார். ‘DC’ படத்துக்கும் அவர் பேட்டி கொடுக்க மாட்டார். அல்லு அர்ஜுன் படத்திற்கும் பேட்டி கொடுக்கப்போவதில்லை என்ற மனநிலையில்தான் இருக்கிறார். அதற்கான காரணத்தை அவர்தான் சொல்ல வேண்டும். ஆனாலும் நீங்கள் எல்லாம் அவரை விடமாட்டீர்கள். எப்படியாவது பேசவைத்துவிடுவீர்கள்,” என்று சிரித்தபடி தெரிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களை சந்தித்து வரும் நிலையில், அதனால் ஏற்பட்ட மனஅழுத்தமே லோகேஷின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், “விமர்சனங்களை தாண்டி மீண்டும் கம்பேக் கொடுப்பார் லோகேஷ்” என்று அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
I will not give interviews anymore Lokesh Kanagaraj sudden decision after the single failure of the film Coolie