முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்டது திமுக! தி.மு.க. டீசண்ட் வெர்ஷன் அம்பலமானது – உதயநிதிக்கு முதல்வர் விஜய் கடும் பதிலடி
DMK rejected by three quarters of the people DMK discredited version exposed Chief Minister Vijay gives a strong response to Udhayanidhi
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையாக பதிலளித்துள்ளார். தனது எக்ஸ் (X) தளப் பதிவில் நீண்ட விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், திமுகவின் வாக்கு சதவிகிதம், கூட்டணி அரசியல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விரிவாக பேசினார்.
விஜய் தனது பதிவில்,“நமது மக்கள் அரசு மீது நம்பிக்கை வைத்து 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்தோர் 22 பேர். நடுநிலை வகித்தோர் 5 பேர். பங்கேற்காதோர் 60 பேர். இதன் மூலம் மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது,” என்று குறிப்பிட்டார்.மேலும், ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பானதை குறிப்பிட்ட விஜய்,“ஆளும் கட்சியின் ஆதரவை மட்டும் காட்டி, எதிர்ப்பை மறைக்கும் வகையில் எதையும் செய்யவில்லை. உலகமே நேரலையில் அனைத்தையும் பார்த்தது,” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “பெரும்பான்மை மக்களின் ஆதரவை தவெக பெறவில்லை” என்ற கருத்துக்கு பதிலளித்த விஜய், திமுகவின் வாக்கு சதவிகிதத்தை சுட்டிக்காட்டினார்.
அவர் கூறியதாவது: தவெக தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்கு சதவிகிதம் – 34.92%, திமுக தனியாக பெற்ற வாக்கு சதவிகிதம் – 24.19%
“நாங்கள் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 1 கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். திமுகவுக்கு கிடைத்தது 1 கோடியே 19 லட்சம் வாக்குகள் மட்டுமே. எங்களை விட திமுக 52 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது,” என்று தெரிவித்தார்.
விஜய் மேலும்,“தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வென்ற கட்சியை பார்த்து ஏளனமாக பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தது குறித்து பேசுகையில்,“நமது அரசு மதச்சார்பற்ற மற்றும் சமூகநீதி கொள்கையில் உறுதியாக இருப்பதால் தான் அந்த கட்சிகள் ஆதரவு அளித்தன,” என்றார்.
திமுக தங்களை ஆட்சி அமைக்க விடாமல் பல்வேறு முயற்சிகள் செய்ததாக குற்றம்சாட்டிய விஜய்,“மக்கள் ஆதரவு பெற்ற அரசை தடுக்க முயன்றதால் திமுகவின் ‘டீசண்ட் வெர்ஷன்’ அம்பலமாகிவிட்டது,” என தாக்கினார்.
அதேநேரத்தில், அரசியல் நாகரிகத்தை பின்பற்றுவோம் என கூறிய விஜய்,“தி.மு.க. எவ்வளவு ஏளனமாக பேசினாலும், நாம் நாகரிகம் காக்கும் இயக்கமாகவே இருப்போம். அறிஞர் அண்ணாவின் கனிவை அரசியலிலும் பின்பற்ற விரும்புகிறோம்,” என்றார்.
பதிவின் இறுதியில்,“நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி இருக்கிறோம். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில்தான் நமது அரசு கவனம் செலுத்தும்,” என்று தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யின் இந்த நீண்ட மற்றும் தாக்கத்துடன் கூடிய பதிவு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
DMK rejected by three quarters of the people DMK discredited version exposed Chief Minister Vijay gives a strong response to Udhayanidhi