#தஞ்சாவூர் || துரோகிகளுக்கு அதிமுகவில் இடமில்லை.. அதிகாரத்திற்காக அலையும் ஓபிஎஸ்... ஒரத்தநாட்டில் ரவுண்டு கட்டிய இபிஎஸ்..!!
EPS severely criticized Vaidyalingam and OPS
தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் "அதிமுகவில் இருக்கும் ஒரு தொண்டன் கூட அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறான். இங்க இருக்கும் மக்களால் கட்சி உறுப்பினர்களால் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சர் பதவியை அனுபவித்து இருக்கும் உங்களுக்கு அந்த எண்ணம் கூட இல்லையே.
இங்கே இருக்கும் தொண்டர்களுக்கு நாங்கள் எதுவும் தரவில்லை. ஆனால் நீங்கள் 20 ஆண்டுகாலம் இங்கு அதிகாரித்தில் இருந்தீர்களே.! இந்த மாவட்ட மக்களுக்கு ஏதாவது செய்தீர்களா? நான் எல்லா அமைச்சர்களையும் பார்த்துள்ளேன். எல்லாம் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி பொறுப்பாளர்களும் தங்கள் பகுதிக்கு ஏதாவது செய்யுங்கள் என கேட்பார்கள். ஆனால் இங்கு இருக்கும் வைத்தியலிங்கம் எதுவும் செய்யக் கூடாது என எண்ணுபவர்.

தன்னை உயர்த்தியவர்களை, தன்னை பதவியில் அமர்தியவர்களை, தனக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒருவர் கூட உதவி செய்யாத நபர் தான் இங்கே இருக்கும் வைத்தியலிங்கம். அண்மையில் திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்படுத்தி ஓபிஎஸ் அவர்களும் வைத்தியலிங்கம் அவர்களும் மிக அழகாக நிறைய பேசினர்.
என்ன பேசினார்கள், கடைசி வரை என்னை மட்டுமே திட்டினார்கள். என்னைய திட்டி என்னய்யா பண்ண போற, நான் ஒரு சாதாரண தொண்டன். நான் ஒரு சாதாரண விவசாயி. அமர்ந்திருக்கும் ஒருவனாக இருந்து படிப்படியாக உயர்ந்து இந்த பதவிக்கு வந்துள்ளேன். இப்பொழுது கூட நான் பொதுச் செயலாளர் இல்லை இங்கே இருக்கும் ஒவ்வொரு தொண்டனும் பொதுச்செயலாளர்.

உங்களைப்போல அதிகாரத்திற்காக அலையவில்லை. அதிகாரத்திற்காக நான் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். பதவி என்பது தோளில் போட்டுக் கொள்ளும் துண்டை போன்றது. நான் ஒரு விவசாயி. இந்த நாட்டிற்காக தன்னையே அர்ப்பணிக்க கூடியவன் தான் விவசாயி. எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவை தான் சாப்பிட முடியும். பணத்தை வேகவைத்து சாப்பிட முடியாது. இந்த வைத்தியலிங்கம் அல்ல, ஓபிஎஸ் அல்ல உங்களைப் போல் ஓராயிரம் வைத்தியலிங்கம் வந்தாலும் ஓராயிரம் ஓபிஎஸ் வந்தாலும் துரோக செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. அதிமுக ஆட்சியில் அமரக்கூடாது என சட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டு போட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். என்றைக்குமே அதிமுக தொண்டன் உங்களை மன்னிக்க மாட்டான்" என வைத்தியலிங்கத்தையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
English Summary
EPS severely criticized Vaidyalingam and OPS