திமுக ஆட்சியில் நெசவுத் தொழிலே அழிஞ்சு போச்சு!! எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்!!
Eps alleged weaving industry destroyed in DMK regime
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட அதிமுக கொடி கம்பத்தில் கொடி ஏற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் மத்தியில் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கொடியேற்ற நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் பேசிய அவர் "அதிமுக ஆட்சியில் கொப்பரை தேங்காயின் விலை விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால் விவசாயிகள் அதிமுக ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

அதேபோன்று விவசாயிகள் மும்முனை மின்சாரம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதனை ஏற்று 01.04.2021 மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. திமுக பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும்? எப்போது தடைப்படும்? என்று விவசாயிகள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டதால் விவசாயிகளும் தங்களுடைய வேளாண் பணிகளை தடை இல்லாமல் மேற்கொண்டு விவசாய பொருட்களுக்கும் நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

அதேபோன்று நெசவாளர்கள் நெய்கின்ற துணிக்கு இன்று நியாயமான விலை கிடைக்கவில்லை. அதனால் நெசவாளர்கள் பல்வேறு தொழில்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை இந்த ஆட்சியில் பார்க்க வேண்டிய உள்ளது. இன்று கைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசைத்தறி தொழில் செய்பவர்கள் நஷ்டத்திற்கு ஆளாகி தொழிற்சாலைகளை மூடும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் விசைத்தறியும் கைத்தறியும் நசுங்கி மக்கள் துன்பப்படுகின்ற காட்சிகளை தான் நம்மால் பார்க்க முடிகிறது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களால் விவசாயமும், நெசவும் அழிந்துவிட்டது. ஒட்டுமொத்த தமிழகமே அழிவு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Eps alleged weaving industry destroyed in DMK regime