தமிழக தேர்தல் தோல்வி எதிரொலி: அண்ணாமலை மீண்டும் பாஜக மாநில தலைவர் ஆகணும். . ஸ்ரீதர் வேம்பு முதல் பல ஆதரவாளர்கள் குரல்!
Echoes of Tamil Nadu election defeat Annamalai wants to become BJP state president again Many supporters including Sridhar Vembu are vocal
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக கடும் தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் உள்கட்சி அதிருப்தி வெடித்துள்ளது. 28 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மாநில தலைவர் நைனா நாகேந்திரன் பதவி விலக வேண்டும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.
மற்றொரு பக்கம், திமுக, அதிமுக, பாஜக போன்ற பாரம்பரிய கட்சிகள் கடுமையான பின்னடைவை சந்தித்தன. திமுகவில் பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியடைந்ததுடன், அதிமுகவிலும் முன்னாள் அமைச்சர்கள் பலர் வெற்றி பெற முடியவில்லை. பாஜகவோ 28 இடங்களில் போட்டியிட்டு, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 27 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்கான காரணமாக, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றியதையே அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்து வாக்கு வங்கி உயர்ந்திருந்ததை அவர்கள் நினைவுகூர்கிறார்கள். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிக்காகவே, எடப்பாடி பழனிசாமியின் விருப்பப்படி அண்ணாமலை மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு நைனா நாகேந்திரன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டாலும், அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என அண்ணாமலை ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, “விஜய் அலைக்கு எதிராக இளைஞர்களை ஈர்க்கக்கூடிய ஒரே தலைவர் அண்ணாமலைதான்” என்ற கருத்து பாஜக தொண்டர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.
இதற்கிடையில், தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவும் தனது எக்ஸ் தள பதிவில் அண்ணாமலையை மீண்டும் மாநில தலைவராக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “இளைஞர்களிடையே விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை எதிர்கொள்ள அண்ணாமலை போன்ற இளம் தலைமையே தேவையானது” என்ற கருத்தும் பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், சமூக வலைதளங்களில் வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், நைனா நாகேந்திரன் ஆகியோர் தோல்விக்குக் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் போலியான ராஜினாமா கடிதங்களையும் பரப்பி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், தமிழக பாஜக தலைமை மாற்றம் குறித்து டெல்லி மேலிடம் மறுபரிசீலனை செய்யுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
English Summary
Echoes of Tamil Nadu election defeat Annamalai wants to become BJP state president again Many supporters including Sridhar Vembu are vocal