இது அநியாயம்., மத்திய அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் அவசர கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


அதிகரிக்கும் எரிவாயு விலையால் மக்கள் அவதிபடுவதால், மத்திய அரசு மானியத்தை உயர்த்த வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

"மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடாக மானியம் உயர்த்தப்படாததால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ற வகையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், எவரும் எதிர்பாராத வகையில் சமையல் எரிவாயு விலை இன்று ஒரு உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு பிப்ரவரி மாதத்தில் இது இரண்டாவது விலை உயர்வாகும். கடந்த 4&ஆம் தேதி சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், அந்த  அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பாகவே அடுத்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் மாதத்தில் ரூ.37, ஜூலை மாதத்தில் ரூ. 4, திசம்பர் மாதத்தில் ரூ.100, பிப்ரவரி மாதத்தில் ரூ.75 என கடந்த 8 நாட்களில் சமையல் எரிவாயு விலை ரூ.215.50 காசுகள் அதிகரித்துள்ளது.  வழக்கமாக மானிய விலை சமையல் எரிவாயு உயரும் போது அது மக்கள் மீது சுமத்தப்படாது. விலை உயர்வுக்கு இணையாக மத்திய அரசின் மானியம் உயர்த்தப்படும் என்பதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், கடந்த சில மாதங்களாக மானிய விலை சிலிண்டருக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் உயர்த்தப்படாததால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் படும் அவதி அதிகமாகியிருக்கிறது.

2019-ஆம் ஆண்டு மே மாதம் சமையல் எரிவாயுவின் அடிப்படை விலை ரூ.484.02 ஆக நிர்ணயிக்கப் பட்டு இருந்தது. சமையல் எரிவாயு விலையை அதற்கும் கூடுதலாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தினால், அந்தத் தொகையை மத்திய அரசு மானியமாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பது தான் விதியாகும். அப்போது எரிவாயுவின் உருளை ரூ.728 ஆக இருந்த நிலையில் அடிப்படை விலை போக மீதமுள்ள 243.98 ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கி வந்தது. அந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருட்களின் தேவை குறைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த மே மாதம் சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.569 ஆக குறைந்தது. அப்போது அடிப்படை விலையான ரூ.484.02 போக மீதம் 84.98 ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அப்போது அடிப்படை விலையை ரூ.569 ஆக உயர்த்திய மத்திய அரசு, மானியத்தை நிறுத்தி விட்டது.

அதன் பிறகாவது சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு இணையாக மானியத்தை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், கடந்த 8 மாதங்களில் சமையல் எரிவாயு விலை உருளைக்கு 215.50 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், மானியம் ரூ.24.95 மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால் 2019-ஆம் ஆண்டு மே மாத விலையுடன் ஒப்பிடும் போது ஓர் உருளைக்கு ரூ.275.53-ம், 2020 மே மாத விலையுடன் ஒப்பிடும் போது ரூ.190.55-ம் கூடுதலாக மக்கள் செலுத்த வேண்டியுள்ளது. இது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது. இந்த சுமையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இதைக் கருத்தில் கொண்டு வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு மானியத்தை  ரூ.275.53 உயர்த்தி ரூ.300.48 ஆக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்; அதன் மூலம் ஏழை& நடுத்தர மக்கள் அனுபவித்து வரும் துயரத்தைப் போக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Request to Central Govt for gas cylinder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->