தாக்கல் ஆகும் முக்கிய மசோதா - டாக்டர் இராமதாஸ் மகிழ்ச்சியுடன் வரவேற்பு!
Dr Ramadoss Happy for Woman Reservation bill 2023
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் இன்றே அந்த முன்வரைவை தாக்கல் செய்து, அடுத்த ஓரிரு நாட்களில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன; இது வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் தில்லியில் நேற்று தொடங்கிய நிலையில், அதில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய முக்கிய சட்ட முன்வரைவுகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
2010-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் கடந்த 13 ஆண்டுகளில் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், இப்போது திடீரென அச்சட்டத்திற்கு புத்துயிர் ஊட்டப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாடாளுமன்ற மக்களவையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமைவது உறுதி.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிறைவேற்றப்படாத கனவு ஆகும்.
இது கோரிக்கையாகவே இருந்து வந்த நிலையில், இராஜிவ் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டது.
இராஜிவ் காலத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், பின்னர் வந்த நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் இந்த இரு சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு மகளிருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றும் முயற்சி தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது.
மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 81 ஆம் அரசியல் சட்டத் திருத்த முன்வரைவு 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் தாக்கல் செய்யப்பட்டாலும் அது தோல்வியடைந்தது.
அதன்பின், 1998, 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளிலும் இந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டாலும் கூட, அதற்கு போதிய ஆதரவில்லாததால் நிறைவேறவில்லை.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2010-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாத நிலையில், இப்போது அச்சட்டத்திற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாத கடமை ஆகும். இந்த கடமையை நிறைவேற்றுவது பல ஆண்டுகளாக தாமதிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல் ஆகும்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது.
இதை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நீட்டிக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகளின் நிலைப்பாடும், கோரிக்கையும் ஆகும். இந்தக் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் பிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்காமலேயே போய்விடும்.
அதனால், சமூகநீதி சார்ந்த இந்த கோரிக்கையை மத்திய அரசு ஆராய வேண்டும். இது உடனடியாக சாத்தியமில்லை என்றால், அடுத்த வாய்ப்பில் அதற்கான திருத்தம் செய்யப்பட வேண்டும். அதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு மத்திய அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும்.
அதேபோல், மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது தொடக்க கட்டமாக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 50% என்ற அளவுக்கு பல மாநிலங்களில் உயர்த்தப்பட்டிருப்பதைப் போல நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கான ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
எந்த வகையில் பார்த்தாலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நாடாளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Happy for Woman Reservation bill 2023