வியக்க வைக்கும் திட்டங்களும், மலைக்க வைக்கும் கடனும், கவலை அளித்தாலும், பட்ஜெட்டை வரவேற்ற டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


வேளாண்மை, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "தமிழக சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

வேளாண்மை தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை உணர்ந்து  கொண்டிருக்கும் தமிழக அரசு, 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்; தென்காசியில் எலுமிச்சை, தூத்துக்குடியில் மிளகாய் மையங்கள் அமைக்கப்படும்; உழவர்களின்  ஐயங்களை தீர்ப்பதற்காக உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டம்; உழவர் பாதுகாப்புதிட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை  அறிவித்திருக்கிறது. உழவர்களுக்கு  ரூ.11,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் உழவர்களுக்கு தாராளமாக கடன் கிடைக்கும்.

நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதல்கட்டமாக காவிரி - வெள்ளாறு இடையே இணைப்புக் கால்வாய் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்த ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பதும், காவிரி - சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத் தக்கவை ஆகும். 906 குளங்கள், 183 அணைக்கட்டுகளை சீரமைக்கவும், 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்கவும் ரூ.649 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும்,  நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியவை ஆகும். இந்தத் திட்டங்களில்   பெரும்பாலானவை பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல்நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தவையாகும்.

தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கும் நிதிநிலை அறிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்; சென்னை - கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்;சேலம் புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள்  அமைக்கப்படும்; திருநெல்வேலி கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பல்லாயிரக்  கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும். மகளிர் பாதுகாப்புக்காக  அரசு பேருந்துகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன், மகளிர் நலத் திட்டங்களுக்காக ரூ.78,796 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

பள்ளிக்கல்வித் துறைக்கு 2019-20 ஆம் ஆண்டில் ரூ.28,757 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் அதைவிட 21.20% கூடுதலாக ரூ.34,841 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் பள்ளிக்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு இந்த அளவுக்கு  உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.  இது எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாகும். மூன்றே கால் மணி நேரம் நீடித்த  நிதிநிலை அறிக்கை  உரையில் மின்சக்தி, தொழில்துறை, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு   இருக்கிறது. உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் வரி தவிர்த்த அரசின் பிற வருவாய்களை அதிகரிக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட வில்லை. தமிழகத்தின் கடன்சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை சீர் கெடுத்து வந்த ஸ்டெர்லைட் ஆலை  நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புதிதாக ரூ.49,000 கோடி செலவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கக்கூடும். இனி வரும் காலங்களிலாவது இத்தகைய திட்டங்களை கைவிட அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DR Ramadoss About Budget 2020 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->