'கூட்டணி கட்சிகளை அடிமையா நினைக்காதீங்க'...! - தி.மு.க.வை வறுத்தெடுத்த திருமாவளவன்
Dont think of coalition parties slaves Thirumavalavan criticizes DMK
விசிக தலைவர் தொல். திருமாவளவன், கூட்டணி அரசியல், அமைச்சர் பதவி மற்றும் தி.மு.க.வுடனான உறவு குறித்து விரிவாக கருத்து தெரிவித்து, கூட்டணிக் கட்சிகளின் மனநிலையை மதிக்காததே அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய காரணம் என்று விமர்சித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருப்பதாக முன்கூட்டியே அறிவித்து, கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களையும் அரசியல் பங்களிப்பையும் மதித்து, அவர்கள் எதிர்பார்த்த அளவில் தொகுதிகளை ஒதுக்கியிருந்தால், இவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.

மேலும், கூட்டணிக் கட்சிகள் விரைவாக விலகிச் சென்றதற்கான காரணங்களையும் இந்தக் கோணத்தில் ஆராய வேண்டும் என்றும், அதனைப் புறக்கணித்துவிட்டு 'துரோகம்' என்ற ஒரே வார்த்தையில் விமர்சிப்பது பொருத்தமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அமைச்சர் பதவியில் இருப்பதற்காக எந்தக் கொள்கையையும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தேவையான சூழ்நிலை உருவானால் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் விலகத் தயார் என்ற மனநிலையில்தான் தாம் இருப்பதாக தெரிவித்தார்.
பதவியின் மீது பற்றுதல் இல்லாததாலேயே அவ்வாறு கூறுவதாகவும் விளக்கமளித்தார்.தொடர்ந்து பேசிய திருமாவளவன், அரசியலில் சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுக்கும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றார். "ஒரு கூட்டணியில் இருந்தால் அங்கேயே கட்டுப்பட்டு இருக்க வேண்டும்" என்ற மனப்போக்கு, சுய சிந்தனையை மறுக்கும் அணுகுமுறையாகும் என்றும், அரசியல் கட்சிகளை சமமான கூட்டாளிகளாக அல்லாமல் கீழ்ப்படிதல் மனநிலையுடன் அணுகுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும் விமர்சித்தார்.
மேலும், அமைச்சர் பதவியை மட்டும் பாதுகாப்பதே நோக்கமாக இருந்திருந்தால், ஆட்சியைப் பாராட்டிக் கொண்டே அமைதியாக இருந்திருக்கலாம் என்றும், ஆனால் நாட்டின் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தாம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாகவும் கூறினார்.
தான் முன்வைக்கும் அரசியல் கருத்துகளை ஆராயாமல், "மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இணையவே இவ்வாறு பேசுகிறார்" என்று விமர்சிப்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும், அதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது தமிழக வெற்றி கழக அரசில் இடம்பெற்றுள்ள நிலையில், அதனை முன்னிறுத்தி தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே திருமாவளவன் இந்த விளக்கங்களை அளித்துள்ளார்.
English Summary
Dont think of coalition parties slaves Thirumavalavan criticizes DMK