லஞ்ச ஒழிப்புத்துறையின் மெகா ‘ரெய்டு’...! அரசு அலுவலகங்களில் புகுந்து ரூ.22.33 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல்....!
Anti Corruption Department mega raid Government offices raided and 22point33 lakh unaccounted cash seized
தமிழகம் முழுவதும் ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில், கணக்கில் வராத ரூ.22.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், லஞ்சம் பெற்ற பல்வேறு துறை அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை 4 முதல் 10-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 11 அரசு அலுவலகங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த சோதனைகளில் கணக்கில் வராத ரூ.12 லட்சத்து 46 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும், மாநில எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற கண்காணிப்பு நடவடிக்கைகளில் ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதால், மொத்தமாக ரூ.22 லட்சத்து 33 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 7-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் கட்டட வரைபட அனுமதி வழங்குவதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். அதே நாளில், திருப்பூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை திருப்பி வழங்குவதற்காக ரூ.1,000 லஞ்சம் பெற்ற காவலர் அழகுராஜாவும் ஜூலை 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.அதே நாளில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருமணம் நடத்தித் தருவதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளரும் கைது செய்யப்பட்டார்.
அதே மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார்.ஜூலை 10-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்காக ரூ.2,500 லஞ்சம் பெற்ற தாலுகா அலுவலக உதவியாளர் ஆரோன் கைது செய்யப்பட்டார்.
அதே நாளில் தென்காசி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் சங்கரும் கையும் களவுமாக சிக்கினார்.மேலும், லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தாசில்தார் ஆதிபகவான் மற்றும் ஓட்டுநர் கந்தசாமி ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Anti Corruption Department mega raid Government offices raided and 22point33 lakh unaccounted cash seized