தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி பதவியேற்க தடை கோரி திமுக அவசர வழக்கு; நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை..!
DMKs urgent petition seeking to restrain TVK candidate Srinivasa Sethupathi from assuming office to be heard in the High Court tomorrow
நடந்து முடிந்த தமிழாகி சட்டமன்ற தேர்தலில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தவெக -திமுக இடையே திருப்பத்தூர் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. நள்ளிரவு வரை சென்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி (83,365 வாக்குகள்), திமுக வேட்பாளர் பெரியகருப்பனை (83,364) விட வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதால், சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, நாளை (10-ஆம் தேதி ) காலை 10:30 மணிக்கு, கோடைக்கால விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
DMKs urgent petition seeking to restrain TVK candidate Srinivasa Sethupathi from assuming office to be heard in the High Court tomorrow