அரசியல் பேச தகுதியற்றவர் அண்ணாமலை.. போட்டு தாக்கிய டி.ஆர் பாலு..!!
DMK tr balu criticized bjp Annamalai
தஞ்சாவூரில் நேற்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சாவூர் மத்திய மாவட்ட மாநகர திமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு கொறடா கோவி.செழியன், எம்பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், மாநகர செயலாளர் சண்.ராமநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி கலந்துகொண்டு பேசினார். பொதுக்கூட்டம் மேட்டையில் அவர் பேசியதாவது "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி நான் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி அந்த திட்டத்தை நிறுத்த வைத்தோம்.
ஆனால் இப்போது யார் யாரோ பாராட்டு விழா நடத்திக் கொள்கின்றனர். அரசியல் பேச தகுதி இல்லாதவர் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. நான் ரூ.10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக கூறுகிறார். இதற்கு அவர் நீதிமன்றத்துக்குத் தான் சென்றிருக்க வேண்டும். நான் அவருக்கு நோட்டீஸ் கொடுத்து 12 நாட்களாகி விட்டது இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.

இதனால் அவர் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வரும் மே 8ம் தேதி கிரிமினல் வழக்கு தொடர உள்ளேன். மேலும் ரூ.100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன். திமுக தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க சதி நடக்கிறது. அதனை எதிர்கொள்ள ஒவ்வொரு திமுக தொண்டனும் தயாராக உள்ளோம்." என பொதுக்கூட்ட மேடையில் பேசி உள்ளார்.
English Summary
DMK tr balu criticized bjp Annamalai