சசிகலா, ஓபிஎஸ், கருணாஸ்.. முக்குலத்தோர் குறிவைக்கும் திமுக!ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் மைக்ரோ திட்டம்! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூக மக்களின் ஆதரவைப் பெற திமுக தலைமை மைக்ரோ லெவல் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 2016 தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்பற்றிய அரசியல் பாணியை இந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மட்டும் 58 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், இரு முக்கிய கட்சிகளும் இங்கு தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அதே நேரத்தில், அதிமுக மீது “கவுண்டர் கட்சி” என்ற விமர்சனமும் எழுந்தது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கட்சியில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற கருத்தும் சில சமூகங்களில் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த தேர்தலில் எஸ்டிபிஐ மற்றும் தேமுதிக கூட்டணியுடன் டிடிவி தினகரனின் அமமுக, சுமார் 23 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதித்ததாகவும் மதிப்பிடப்பட்டது. இந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு இம்முறை பாஜக மூலம் டிடிவி தினகரனை தனது கூட்டணிக்குள் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அதிமுக எதிர்பார்க்காத வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அரசியல் கணக்கை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. முக்குலத்தோர் சமூகத்தின் அடையாளமாக ஓபிஎஸ் கருதப்பட்டாலும், அவரது செல்வாக்கு குறைந்துள்ளதாக சிலர் மதிப்பிடுகின்றனர். இருப்பினும் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவரை திமுக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் “முக்குலத்தோர் சமூகத்திற்கு எதிரானவர் எடப்பாடி பழனிசாமி” என்ற அரசியல் பிம்பத்தை உருவாக்கும் முயற்சியும் திமுக தரப்பில் நடைபெறுகிறது என கூறப்படுகிறது.

இதற்கிடையில் 2016 தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், திருவாடனை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு அவரது சமூக பின்னணி முக்கிய காரணமாக இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே பாணியை இந்த முறை திமுக பின்பற்றுகிறது. வரவிருக்கும் தேர்தலில் கருணாஸ் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக களமிறங்கி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் என கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம் சசிகலாவும் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் சவாலை உருவாக்கும் முயற்சியில் முக்குலத்தோர் சமூக அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் பல்வேறு திசைகளில் பிளவுபட வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த நிலையில் டிடிவி தினகரன் மற்றும் பாஜக கூட்டணியை மட்டுமே நம்பி எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்திக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், தென் மாவட்டங்களை மையமாக வைத்து திமுக அமைத்துள்ள இந்த மைக்ரோ அரசியல் திட்டம் தேர்தலில் பலன் தருமா என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK targets Sasikala OPS Karunas the three Stalin micro plan in the style of Jayalalithaa


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->