உடையும் திமுக கூட்டணி.. அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்! எடப்பாடி சொன்ன தகவல்!
DMK alliance is falling apart Congress is asking for more seats Information given by Edappadi
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
அவரது பேச்சு:“நெல்லையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. அங்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘அடுத்த சட்டசபை தேர்தலில் பாதி சீட் வேண்டும் – 117 தொகுதிகள் வேண்டும்’ என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார், ‘திமுக வெற்றி பெறாது; வெற்றி பெற்றால் எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்றே தெரிவித்துள்ளார். முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரியும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். இதன் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது என்பது தெளிவாகிறது” என்றார்.
மேலும், திமுக தலைமையை கிண்டலடித்த எடப்பாடி,“60 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் சாறு குடிக்கத் திமுக மட்டும், சக்கை தான் காங்கிரஸுக்கு. ஆனால் இப்போது தான் காங்கிரஸுக்கு ஞானோதயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கூடுதல் சீட், ஆட்சிப் பங்கு கேட்கத் தொடங்கியுள்ளது. திமுக கூடாரம் காலியாகப்போகிறது” என தாக்கினார்.
திமுக எம்.பி. கனிமொழி கூறிய “அதிமுக அலுவலகம் டெல்லியில் அமித்ஷா வீட்டில்தான் இருக்கிறது” என்ற கருத்துக்கும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.“அந்த அம்மா கனவில் இருக்கிறார் போல. அதிமுக அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. எங்கள் கட்சி தொண்டர்களால் நிரம்பியுள்ளது. எவ்வளவு சதி செய்தாலும், எவ்வளவு அவதாரம் எடுத்தாலும், ஸ்டாலினால் அதிமுகவை அசைக்க முடியாது. திமுக இரண்டாக பிளந்த நேரத்தில் அந்தக் கட்சியை காப்பாற்றியது ஜெயலலிதாதான் என்பதை மறக்காதீர்கள்” என்றார்.
அதே நேரத்தில் நீலகிரி மக்களிடம் பேசும்போது,“ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்பு இப்பகுதிக்கு எதாவது செய்தாரா? எங்கள் ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 400 கோடி ரூபாயில் நவீன கட்டிடம் கட்டி முடித்தோம். அதைத் திறந்துவைத்தது திமுக அரசு தான். நாங்கள் பெற்ற குழந்தைக்கு அவர்கள் பெயர் வைத்துவிட்டார்கள். தினமும் போட்டோஷூட், குழு அமைப்பு – அதோடு தான் முடிகிறது” எனக் கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடியின் இந்த கூற்றுகள், அடுத்த தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உண்மையிலேயே பிளவு ஏற்படுமா என்ற ஆர்வத்தை தூண்டி, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
English Summary
DMK alliance is falling apart Congress is asking for more seats Information given by Edappadi