"கடலூர் மாவட்டத்தின் பதற்ற நிலைக்கு யார் காரணம்? அம்பலமாகும் விசிக + திமுக சதித்திட்டம்!" என்ற தலைப்பில், பாமகவின் அருள் இரத்தினம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டத்தில் ஒரு சாதி மோதலை அரங்கேற்றி, அதனை தமிழ்நாடு முழுவதும் பரப்புவதற்கு விசிக சதி செய்கிறது. அந்த சதிக்கு திமுக உதவி செய்கிறது! இந்த சதித்திட்டத்தை முறியடிக்க அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புவோர் அனைவரும் முன்வர வேண்டும்.
உண்மை 1: மஞ்சக்கொல்லை கிராமத்தில் அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்ற மக்கள் கோரினர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் அரசியல் கட்சிக் கொடிகளால் சச்சரவுகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த ஊரில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில், ஊர் பொது மக்கள் மனு அளித்துள்ளனர் (ஊராட்சி மன்றத் தலைவர் த.வா.க கட்சியை சேர்ந்தவர்). தாசில்தார் தலைமையிலான அமைதி கூட்டங்களில் எல்லா கட்சிகளின் கொடிக் கம்பங்களும் நீக்கப்பட வேண்டும் என பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னர் எந்த கொடிக் கம்பத்திலும் கொடி ஏற்றப்படவில்லை. விசிக கம்பத்தில் மட்டும் மாவட்டச் செயலாளரை வைத்து கொடி ஏற்றியுள்ளனர்.
(குறிப்பு: மஞ்சக்கொல்லைக்கு அருகில் உள்ள, பட்டியலின மக்கள் அதிக எண்ணிக்கையிலும் வன்னியர்கள் குறைவான எண்ணிக்கையிலும் வசிக்கும் பு.உடையூர் கிராமத்தில் பாமக கொடி அமைக்க அனுமதிக்கப்படவில்லை).
உண்மை 2: சாதியைக் கூறி வன்னிய இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்
மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாமக தொண்டர் செல்லத்துரை சில நாட்களுக்கு முன்பு பு.உடையூர் என்ற கிராமத்தின் வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு விசிகவைச் சேர்ந்த சிலர் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். வழியை விட்டு ஒதுங்கி நின்று மது அருந்தும்படி செல்லத்துரை கூறியதால் ஆத்திரம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்த கும்பல், கட்டைகளாலும், இரும்பு கம்பியாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கினர். இதனால் காயமடைந்து, ரத்தம் வழியும் நிலையில் செல்லத்துரை மயங்கி விழுந்தார்.
கொலைவெறி கும்பலைச் சேர்ந்தவர்கள், செல்லத்துரையின் சட்டையில் உள்ள வன்னியர் சமுதாய சின்னத்தை மிதித்தும், அவதூறாக பேசியும் இழிவுபடுத்தி, அதனை காணொலியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
உண்மை 3: கொடிகள் இடிப்பு முயற்சிக்கும் பாமகவுக்கும் தொடர்பு இல்லை.
பாமக தொண்டர் செல்லத்துரை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது சொந்த ஊருக்கு சென்ற வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியும், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷும் செல்லத்துரையின் குடும்பம் மற்றும் ஊர்மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பாமகவினரும் ஊர் மக்களும் செல்லத்துரை மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரினர்.
அப்போது, அருள்செல்வி என்பவர் விசிக கொடிக் கம்பத்தையும், பாமக கொடிக்க கம்பத்தையும் உடைப்பதற்கு முயன்றார். இதனை காவல்துறையினரும் மக்களும் தடுத்தனர். அங்குள்ள எல்லா கொடிக் கம்பங்களையும் இடிக்க வேண்டும் என அவர் முயன்றார்.
பாமக தொண்டர் செல்லத்துரை மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என பாமக கோரியதற்கும், மஞ்சக்கொல்லையில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்கிற கிராம மக்களின் கோரிக்கைக்கும் நேரடி தொடர்பு ஏதும் இல்லை.
உண்மை 4: “இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை அடிப்போம்" - விஷம் கக்கும் விசிக!
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புவனகிரியில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டி வன்னிய மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசினர். வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களின் தலையை வெட்டி எடுப்போம் என்று மிரட்டல் விடுத்தனர். அதுமட்டுமின்றி, ‘‘தமிழ்நாட்டில் இப்போது நடப்பது திருமா காலம். இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக் கொண்டு தான் இருப்போம். அவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும்’’ என்று கொக்கரித்தனர்.
உண்மை 5: நடக்காத நிகழ்வுக்கு SC/ST வன்கொடுமை சட்டம்!
மஞ்சக்கொல்லை கிராமத்தில் அருள்செல்வி என்பவர் பாமக கொடிக்க கம்பத்தையும், விசிக கொடிக் கம்பத்தையும் உடைப்பதற்கு முயன்றார். இதனை காவல்துறையினரும் மக்களும் தடுத்தனர். அங்குள்ள அனைத்துக் கொடிக் கம்பங்களையும் இடிக்க அவர் முயன்றார். இது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியானது.
ஆனால், விசிக கொடிக்கம்பத்தை மட்டுமே அகற்ற முயன்றதாக சமூக ஊடகங்களில் போலியாக சித்தரித்து, இதனை ஒரு சாதி மோதலாகக் காட்டும் கட்டுக்கதைகளை விசிகவினர் பரப்பினர்.
அருள்செல்வி எந்தவொரு சாதியையும் குறிப்பிடாத நிலையில், அவர் ஒரு பட்டியலின சாதியை இழிவாக பேசியதாக விசிகவினர் பொய் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, அருள்செல்வி மற்றும் மஞ்சக்கொல்லை கிராமத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பாமக மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் SC/ST வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தீர்வு என்ன?
1. வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்ய வேண்டும். மேலும், பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
2. மஞ்சக்கொல்லை செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
3. அடிப்படை ஆதாரமில்லாமல், SC/ST வன்கொடுமை சட்டத்தில் பதியப்பட்டுள்ள பொய் வழக்கை கைவிட வேண்டும். இச்சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.
4. மஞ்சக்கொல்லை கொடி விவகாரம் தொடர்பான கிராம மக்கள் கோரிக்கை குறித்து, நவம்பர் 5ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அமைதி கூட்டத்தை நடத்தி, அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும்.
5. மஞ்சக்கொல்லை பகுதியில் ஏற்படும் சாதி மோதலுக்கு முதன்மையான தூண்டுதலாக உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். மேலும், மாநில அளவில் படிப்படியாக மதுக்கடைகளை மூடும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
6. கடலூர் மாவட்டத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டமே அனைத்து சமூகக் கேடுகளுக்கும் அடிப்படை ஆகும். எனவே, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பின்மையை குறிப்பிட்டக் காலத்தில் ஒழிப்பதற்கான சிறப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Cuddalore Manjakollai issue DMK VCK PMK