நீட் தேர்வு ரத்து; மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்தது; நீதித்துறையின் மேற்பார்வையின் கீழ் விசாரணை; சிபிஐ(எம்) வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


கடந்த மே 03 அன்று இளநிலை மருத்துவ படிப்பு (நீட்) தேர்வு நடைபெற்றது. ஆனால் ராஜஸ்தானில் தேர்வு தாள் கசிவு வெளியானதாக கூறப்பட்ட நிலையில், 13 பேர் கைது செய்யப்பட்டு விசரனை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இன்னும் 10 நாட்களுக்கு அடுத்த தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. 

இவ்வாறு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை அளிக்கிறது எனவும், நீதித்துறை மேற்பார்வையில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு இந்த மோசடிக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என  சிபிஐ(எம்) கோரிக்கை வைத்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

"மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளநிலை மருத்துவ படிப்பு) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தேர்வை இவ்வளவு பொறுப்பற்ற முறையில் கையாண்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதன் மூலம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து விட்டனர்.

ராஜஸ்தானில் கேள்வித்தாள் கசிவு நடந்தேறி இருக்கிறது என்றும், அது குறித்து சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறதென்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. இது நீட் தேர்வு பெருமளவுக்கு வியாபாரமாக மாற்றப்பட்டு இருப்பதன் வெளிப்பாடு. நீட் தேர்வு மையங்கள் பணம் கறக்கும் தொழில்களாக மாறி இருப்பதும், பணபலம் மிக்கவர்கள் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு போன்ற மோசடிகளில் ஈடுபடுவதென்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2024 ஆம் ஆண்டும் பீகாரில் வினாத்தாள் கசிவு நடந்தேறி அதற்காக 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கைமாறியதாக பலர் கைது செய்யப்பட்டனர். அதுபோல, சி.எஸ்.ஐ.ஆர் நெட், கியூட் தேர்வுகளும் கடந்த காலங்களில் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சாதாரண, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பல லட்சங்களை தேர்வுப் பயிற்சிக்காக செலவழிப்பதும், அப்பாவி பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை இழப்பதும் தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டது. இதனால் ஏற்படும் மன உளைச்சல்களால் தற்கொலைக்கு கூட இட்டுச் செல்வது கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன.

நீட் தேர்வு ஏதோ தகுதி, திறமைகளை வெளிக்கொணரும் என்று உருவாக்கப்பட்ட பிம்பம் தகர்ந்து வருகிறது. தேசியத் தேர்வு முகமையே ஒரு தேர்வை முறையாக நடத்துகிற தகுதியை, திறமையைப் பெற்றிருக்கிறதா என்ற பெருங்கேள்வி எழுந்துள்ளது. மிகப் பெரிய மோசடி வலைப்பின்னல் நீட் தேர்வை சுற்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆகவே, நீதித்துறை மேற்பார்வையில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு இந்த மோசடிக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பலவும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருவதன் நியாயத்தை இந்த தேர்வு ரத்து மீண்டும் நிரூபித்துள்ளது. ஆகவே, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPIM says cancellation of NEET exam is shocking


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->