ஆசிரியர் தகுதித் தேர்வு (TET); காலக்கெடுவில் புதிய மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்..!
Court Issues Order Announcing New Change to the Deadline for the Teacher Eligibility Test
பணியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதுவதற்கான காலக் கெடுவை இரண்டு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இது ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கும், பணியில் தொடர்வதற்கும் கட்டாயம் எனவும், இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அத்துடன், ஓய்வு பெற 05 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு இந்தத் தேர்வில் இருந்து விலக்கும், அளிக்கப்பட்டது. ஆனால், 05 ஆண்டுகளுக்கும் மேல் பணிவிருப்புக் காலம் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இந்த தகுதித் தேர்வை எழுத வேண்டும் என கூறப்பட்டது.

மேலும் இந்த தேர்வு எழுத விரும்பாதவர்கள் பணியை விட்டு விலகலாம் அல்லது விருப்ப ஓய்வு (VRS) பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. அரசு உதவி பெறும் சிறுபான்மையினப் பள்ளிகளில் இந்த விதியை அரசு கட்டாயமாக்க முடியுமா என்பது குறித்து ஆராய, இந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது மாநில அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவமிக்க ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தது.

அதனை தொடர்ந்து இந்த இந்தச் சீராய்வு மனு, நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை முழுமையாக நிராகரிக்காத நீதிபதிகள், முந்தைய தீர்ப்பில் சில முக்கியச் சலுகைகளை வழங்கி மாற்றி அமைத்தனர். அதன்படி, ஆசிரியர்கள் டெட் தேர்வை எழுதித் தகுதி பெறுவதற்காக ஏற்கனவே, விதிக்கப்பட்டிருந்த 02 ஆண்டுகால அவகாசம், தற்போது 03 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த விவகாரத்தில் கால வரம்பை நிர்ணயித்துள்ள நீதிமன்றம், வரும் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-க்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தகுதி தேர்வை எழுத வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன், இதற்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் அறிவித்துள்ளனர். இந்த உத்தரவு, டெட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆசிரியர்களுக்குக் கூடுதல் கால அவகாசத்தை வழங்கியிருந்தாலும், இதுவே அவர்களுக்கான 'இறுதி வாய்ப்பு' என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, பணியில் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை 231, 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 05 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள். அத்துடன், ஜூலை மாதம் முதல் வாரம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவுள்ளது.
English Summary
Court Issues Order Announcing New Change to the Deadline for the Teacher Eligibility Test