'கேபிள் டிவி இணைப்புகள் குறைந்து விட்டது; செட்டாப் பாக்ஸிலும் ஊழல் நடக்கிறது': எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு..!
Corruption is also happening in set top boxes alleges Edappadi Palaniswami
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ' மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற கருப்பொருளில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பி.என்.சாலையில் மக்களை சந்தித்த அவர், 'திமுக குடும்பம் கேபிள் டிவி நடத்துகின்ற காரணத்தினால், அவர்கள் அரசு கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்கள்,' என தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் அங்கு பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் பிறந்த ஒருவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது, தமிழகத்துக்கும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை என்று பேசியுள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் திருப்பூர் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மக்களின் அடிப்படை தேவைகள் எல்லாம் அதிமுக நிறைவேற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், திமுகவின் 52 மாத ஆட்சியில் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்தார்களா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், அதிமுக திட்டத்தை திமுக திறந்துவைத்துள்ளது. நம் பிள்ளைக்கு திமுக பெயர் வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றும், அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். ஆனால் இப்போது போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறதாகவும், ஒரு முதல்வர் என்பவர் மக்களை திருத்தி நல்வழியில் கொண்டுவர வேண்டும். ஆனால் ஸ்டாலினுக்கு மக்கள் எக்கேடு கெட்டாலும் தன் குடும்பம் செழிக்க வேண்டும் என்பதே எண்ணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசு நினைத்தால்தான் போதைப்பொருளை தடுத்து நிறுத்த முடியும் என்றும், கொங்கு மண்டலத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் முதியவர்கள் கொல்லப்பட்டு, கொள்ளையடிக்கப் படுகிறார்கள். அரசு என்பது விழிப்போடு செயல்பட்டு தடுத்திருந்தால் முதியோர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி இணைப்பு கொடுத்ததாகவும், இன்று இணைப்புகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூறியதோடு, திமுக ஆட்சியில் ஒரு அமைச்சர், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, டி.ஆர்.பி.ராஜாவுக்கு வேண்டப்பட்ட அரிஸ்டோ நிறுவனத்திடம் வாடகைக்கு செட்டாப் பாக்ஸ் வாங்கித் தருகிறார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் அதன் வாடகை மிக மிக அதிகம் என்றும், இதற்குப் பதிலாக புதிய செட்டாப் பாக்ஸ் கொடுத்துவிடலாம். இதிலும் ஊழல் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை, தனியாருக்கு கொடுத்ததால் 300 கோடி ரூபாய். அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், திமுக குடும்பம் கேபிள் டிவி நடத்துகின்ற காரணத்தினால், அவர்கள் அரசு கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார். அத்துடன், அதிமுக ஆட்சியில் 30 லட்சம் இணைப்பு இருந்ததாகவும், அதில் வருமானமும் கிடைத்தது. இன்றைய தினம் 14 லட்சம் இணைப்புகள்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அத்துடன், எல்லாம் பேப்பரில், டிவியில் வரவேண்டும் என்பதற்காகவே இந்த அரசு செயல்படுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அருகே இபிஎஸ் பேசிம் போது கூறியதாவது: ஸ்டாலினுக்கு அதிமுக கூட்டணியை பார்த்து பயம் வந்துவிட்டதாகவும், திமுக கூட்டணி பலம் வாய்ந்தது என்று வெளியில் பேசுகிறார், உள்ளே பயத்தில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ஐந்து முறை முதல்வர் வெளிநாட்டுக்குச் சென்று எவ்வளவு முதலீடு ஈர்த்திருக்கிறார்..? எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளது எனவும், வெளிநாடு போய் அவர் உல்லாசமாக இருந்தார். இருக்கிற தொழில்களும் நலிவடைகிறது என்று பேசியுள்ளார். அத்துடன், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறதாகவும், திருப்பூர் என்றால் டாலர் சிட்டி என்று பெயர் பெற்றது, தமிழக அரசுக்கு அதிகம் அந்நிய செலாவணி ஈட்டிக்கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இப்போது அமெரிக்க வரி விதிப்பால் பல பிரச்னைகளை திருப்பூர் சந்திக்கிற நிலையில், உடனே முதல்வர் தொழிலதிபர்களை சென்னை வரவழைத்து, என்ன பிரச்சினை? அரசு மூலம் எப்படி சரிசெய்வது..? மத்திய அரசோடு தொடர்புகொண்டு சரிவில் இருந்து மீட்பது எப்படி..? என்று செயல்பட்டாரா..? அவ்வாறு செயல்பட்டால்தான் நல்ல முதல்வர் என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
English Summary
Corruption is also happening in set top boxes alleges Edappadi Palaniswami