'இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்; நாடு மிகப் பெரிய விளைவை சந்திக்கும்'; தேர்தல் ஆணையத்துக்கு அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை..!
Akhilesh Yadav warns Election Commission that revolution will break out in India if vote rigging is not stopped
மத்தியில் ஆளும் பாஜ, மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டு தான் தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உபி மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் பேசுகையில்,
ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால், நாடு மிகப் பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என, தேர்தல் ஆணையகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நம் நாட்டில் நடக்கும் பல தேர்தல்களில் ஓட்டுத் திருட்டு நடந்துள்ளது. உபி மாநிலம் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தேர்தல்களில், வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று சமூக வலைதளங்களின் காலம். இளைஞர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஓட்டுத் திருட்டை தடுக்க தேர்தல் ஆணையகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை என்று பேசியுள்ளார். மேலும், ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால், இன்று நம் அண்டை நாடுகளில் அரங்கேறும் அவல நிலை நம் நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.
மேலும், அங்கு அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது போன்று ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால், நம் நாட்டிலும் மக்கள் வீதிகளில் இறங்கும் நிலை வந்துவிடும் என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Akhilesh Yadav warns Election Commission that revolution will break out in India if vote rigging is not stopped