8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டுமென்றும், நீதிமன்றத்தின் முன் ஒரு ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட முன்வர வேண்டுமென்றும் வலியுறுத்தி, 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகிலுரித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில், "இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள், ஒன்றிய அரசின் ஆலோசனையின் பேரில், கடந்த 13-5-2025 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின்கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு ஒன்றினை அனுப்பியது தாங்கள் அறிந்த ஒன்று என்றும், இந்தக் குறிப்பு எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கத்தால் பெறப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதைக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது என்றும், இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களால் இயற்றப்படும் சட்டங்கள், ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபருமான ஆளுநரால் தடைபடுவதைத் திறம்படத் தடுக்கும் வகையில் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாட்டைத் தடுத்திட ஆளுநர்களைப் பயன்படுத்திய விதத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், குறிப்பாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற தாமதத்தை ஆளுநர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்றும், உரிய அரசியலமைப்பு அல்லது சட்டக் காரணங்கள் இல்லாமல் அவற்றை நிறுத்தி வைக்கிறார்கள் என்றும், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் வழக்கமான கோப்புகள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்றும், முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் தலையிடுகிறார்கள் என்றும், கல்வி நிறுவனங்களை அரசியல்மயமாக்க பல்கலைக்கழக வேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆளுநர்களால் இதைச் செய்ய முடிந்தது என்றும், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய பெருமக்கள், உயர் அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் அரசியலமைப்பு ஒழுக்கத்தின்படி செயல்படுவார்கள் என்று நம்பினர் என்றும் அவர் மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில்தான், தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும், அதன்படி

மசோதாக்களைக் கையாளும் போது மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறார்;

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்த ஆளுநர் "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது;

ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலமும், மசோதாக்களை அவைக்குத் திருப்பி அனுப்பாமல் இருப்பதன் மூலமும் ஆளுநர் மசோதாக்களை செயலிழக்கச் செய்ய முடியாது;

ஒரு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு, இரண்டாவது முறையாக ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது;

பிரிவுகள் 200 மற்றும் 201-ன்கீழ் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

அரசியலமைப்பின் கீழ் மாநில அரசுகள் தங்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு தேவையற்ற வகையில் தலையிடாமல் இருப்பதை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு உறுதி செய்யும் என்று மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நமது அரசியலமைப்பின் பாதுகாவலராக, கூட்டாட்சி அமைப்புடன் கூடிய ஜனநாயகக் குடியரசை அடிப்படையாக கொண்ட நமது உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அரசியலமைப்பை சரியாக விளக்கியுள்ளது என்றும், ஆனால், வெளிப்படையாக பா.ஜ.க. இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது என்றும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கினைக் கடைபிடிக்கும் ஆளுநரை எதிர்கொள்ளும்போது, மற்ற மாநிலங்களும் இந்தத் தீர்ப்பினை ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தலாம் என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், பா.ஜ.க. அரசாங்கம் தனது சூழ்ச்சியின் முதல் அங்கமாக குடியரசுத் தலைவர் அவர்களை உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர்களின் விவகாரத்தில் கேள்விக்குரிய பிரச்சினை ஏற்கனவே நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பால் முடிவு செய்யப்பட்டிருக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது என்பது அனைவரும் அறிந்தது என்று தெளிவுபடக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆனாலும், பா.ஜ.க. அரசு ஒரு பரிந்துரையைப் பெறுவதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது அவர்களின் தீய நோக்கத்தைக் குறிக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில சுயாட்சிக் கொள்கையையும் காத்திடும் நோக்கம் கொண்ட, பா.ஜ.க.-வை எதிர்க்கும் மாநில அரசுகள், மாநிலக் கட்சித் தலைவர்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் இந்தச் சட்டப் போராட்டத்தில் இணையுமாறு தான் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் அவர்கள் அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டுமென்று தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில், நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்தபடி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த முக்கியமான பிரச்சினையில் மேற்குறிப்பிட்டுள்ள மாநில முதலமைச்சர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin letter to 6 state CMs State Autonomy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->