தமிழ்நாட்டில் 200 முதல் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்; முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு..?
Chief Minister Vijay issues a bold order to close 200 to 500 TASMAC liquor shops in Tamil Nadu
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சி அமைக்க தேவையான 118-ஐ அக்கட்சியால் பெறமுடியாத நிலையில், கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளிடம் ஆதரவுடன், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், இழுப்பறிகளுக்கு மத்தியில் நேற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழ்நாட்டில் புதிய அரசை அமைத்துள்ளார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் நேரு உள்விளையாட்டு அரங்கிலே, முதலமைச்சராக தனது கன்னி பேச்சை பேசிய முதலமைச்சர் விஜய், ''பெண்கள் பாதுகாப்பை மிகவும் கடுமையாக வைத்திருப்பேன் என்றும், போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுக்குள்வைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதனை இன்று (10ஆம் தேதி) முதலே எடுப்பேன் என்றும், சட்டம் ஒழுங்கில் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன் என்று அதிரடியாக குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் விஜய், தனது அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார். தொடர்ந்து நேற்று மாலையே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, வழிபாட்டு தளங்கள், கல்வி கூடங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை ஆய்வு செய்து உடனடியாக மூட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் அதிகாரிகள் இந்த கடைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், 200 முதல் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் வரை மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Chief Minister Vijay issues a bold order to close 200 to 500 TASMAC liquor shops in Tamil Nadu