களைந்து போய்டுங்க... இல்லை கைது பண்ணுவோம்! தூய்மை பணியாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை - சீமான் கண்டனம்!
chennai protest NTK Seeman DMK Govt
கடந்த 7 நாட்களாக அமைதியாக போராடிவரும் தூய்மை பணியாளர்கள் உடனே கலைந்து செல்லுமாறு சென்னை மாநகர காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மேலும், உத்தரவுக்கு கீழ்படியவில்லை என்றால் வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டு ஆணையர் உத்தரவின் படி சென்னைக்கு வெளியே கொண்டு செல்லப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு கண்டனம் தெரிவித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில், "பணி நிரந்தரம் கோரியும், தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் அறவழிப்போராட்டத்தினைக் காவல்துறையை ஏவி கலைக்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளிவரும் நிலையில், களத்தில் போராட்டக்காரர்களுக்கு அரணாக நாம் தமிழர் கட்சி நிற்கும் என்று தமிழ்நாடு அரசுக்கும், அதன் காவல்துறைக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
எவ்வித இடையூறுமின்றி அமைதி வழியில் போராடும் தூய்மைப்பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையினைக் கூட கேட்டறிந்து செயல்படுத்த முன்வராமல், அவர்களின் போராட்டத்தினை கலைத்திட அரசு முனையுமானால் குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழிவது தலைநகரம் மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்களின் எண்ணமும் செயலும் தான்.
எவ்வித எதேச்சாதிகாரப் போக்கினையும் பின்பற்றிடாமல், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கானப் பணி நிரந்தரம் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்த நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். அதற்கு மாறான அரசின் கொடுங்கோன்மைப் போக்கு எதுவாயினும் போராடும் மக்களோடு சேர்ந்து, நாம் தமிழர் கட்சியும் பெரும் அளவிலானத் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
chennai protest NTK Seeman DMK Govt