சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடவேண்டும்: டி.டி.வி. தினகரன் வேண்டுகோள்..!
TTV Dinakaran urges immediate withdrawal of salary cut for Madras University officials
சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய்ப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை திடீரென குறைக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அப்பல்கலைக்கழக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாணவர்களின் உயர்கல்விக்காகவும், எதிர்கால நலனுக்காகவும் நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றும் பேராசிரியர்களும் அலுவலர்களும் தங்களுக்கான ஊதியத்தையே உரிய நேரத்தில் பெறமுடியாமல் ஒவ்வொரு மாதமும் போராடி வரும் நிலையில், தற்போது அந்த ஊதியத்தையும் குறைக்க முடிவு செய்திருப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கான பணப்பலன்களையும் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் ஒருபுறம் ஊதிய உயர்வு கேட்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வரும் நிலையில், மறுபுறம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, அப்பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு நிதியை ஒதுக்கி அங்கு நிலவிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சிக்கல்களைக் களையத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.என்று அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TTV Dinakaran urges immediate withdrawal of salary cut for Madras University officials