பேச கூட திமுகவின் அனுமதி கேட்பதுபோல நடந்துகொள்கிறார்கள்! கம்னியூஸ்ட்களை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி!
ADMK EPS CPI CPIM DMK
திமுகவின் ஆட்சி குறைகளை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லும் நோக்கத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பேரணியை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிற அவர், இன்று ராஜபாளையத்தில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்தாவது: “திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கலாம்; ஆனால் எங்கள் பக்கம் மக்களின் ஆதரவே மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது.
தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கிறவர்கள் மக்கள் தான். அவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதை நாங்கள் நன்றாக உணர்கிறோம்” என்றார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “கம்யூனிஸ்டுகளின் கொள்கைகள் இப்போது மக்களிடம் செல்வாக்கு இல்லாமல் ஆகிவிட்டன.
தேர்தல் வந்தால், அவர்கள் கட்சி அடையாளம் தெரியாமல் மறைந்து விடும் நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் நலனுக்காக போராடவேண்டிய இவர்களின் நிலைமை, இன்று முற்றிலும் மாறி விட்டது.
திமுக அரசு மீது ஏதேனும் குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்வைத்ததா? ஆணவக் கொலை பற்றிப் பேச கூட, திமுகவின் அனுமதி கேட்பதுபோல நடந்துகொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.