முதல் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகளா? 8000 உதவி தொகை! பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் அறிவிப்புகள்! விஜய் போட்ட மெகா ப்ளான்!
Bold announcements in the first budget An assistance amount of 8000 Budget announcements that will make a splash
சென்னை: தமிழக வெற்றி கழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கிய வாக்குறுதிகளுடன், கல்வி மற்றும் சமூக நலன் சார்ந்த புதிய திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் தலைமையில் கடந்த சில நாட்களாக தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொழில் வளர்ச்சி, முதலீடுகள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயலக வட்டாரங்களின் தகவலின்படி, தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், திருமண உதவியாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை, மாணவர்களுக்கான கல்விக் கடன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கல்வித்துறையில் முக்கிய மாற்றங்களும் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அரசு பள்ளிகளில் கல்வி கற்று அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்படலாம் என்றும், மாநிலம் முழுவதும் 30 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், பள்ளி மாணவர்களின் விண்வெளி அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோள் திட்டங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும் அறிவிப்பும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட கல்வி தொடர்பான விவகாரங்களில் மாநிலத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன், தமிழ்நாட்டில் பனைமரத்தை பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிப்பது, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்துவது போன்ற அறிவிப்புகளும் பரிசீலனையில் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இத்திட்டங்கள் குறித்து இதுவரை தமிழக அரசின் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Bold announcements in the first budget An assistance amount of 8000 Budget announcements that will make a splash