பால் கொள்முதல் விலையை உயர்த்தி கூட்டுறவு சங்கங்களையும், ஆவின் நிறுவனத்தையும் காப்பாற்ற வேண்டும் - வானதி சீனிவாசன்!
BJP Vanathi Srinivasan Milk farmers issue TNGovt
பால் கொள்முதல் விலையை உயர்த்தி கூட்டுறவு சங்கங்களையும், ஆவின் நிறுவனத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், விடுத்துள்ள அறிக்கையில், "மாடுகள் வளர்க்கும் ஏழை, எளியவர்களிடம் இருந்து, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் கொள்முதல் செய்து, ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவது, தீவன செலவு அதிகரிப்பு, கட்டுபடியாகும் விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாடுகள் வளர்க்கும் ஏழை எளிய மக்கள் தொடர்ந்து திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், பொருளாதாரத்தில் மிகமிக அடித்தட்டில் உள்ள மாடுகள் வளர்க்கும் ஏழை எளிய மக்களின் குரலை திமுக அரசு கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. தொடர் நஷ்டத்தை தாங்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலை விற்க தொடங்கியுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 45 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால், தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் முடங்கும் நிலை ஏற்படும் அப்படி நடந்தால் ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து, அந்நிறுவனமும் செயல்பட முடியாத நிலை ஏற்படும். இது தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். ஆவின் நிறுவனம் தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்தி விடுவார்கள். இதனால், ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பால் என்பது மிக மிக அத்தியாவசியமான பொருள். பால் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது சமுதாயத்தில் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். எனவே, இப்பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காண வேண்டும்.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் தான், ஆவின் நிறுவனத்தின் உயிர்நாடி என்பதை திமுக அரசு உணர வேண்டும். இப்பிரச்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். அதன் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களையும், ஆவின் நிறுவனத்தையும் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Vanathi Srinivasan Milk farmers issue TNGovt