மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக: 168 இடங்களில் முன்னிலை; தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டம்..!
BJP Set to Capture Power in West Bengal for the First Time
மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் 02 கட்டமாக நடைபெற்றது. இதில் பால்டா தொகுதியில் பல்வேறு முறைகேடுகள் காரணமாக வரும் 21-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
இந்நிலையில், 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 08 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள 23 மாவட்டங்களில் 77 வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அம்மாநிலம் முழுவதும் 2.5 லட்சம் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை 08 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து காலை 08.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், காலை 09.30 மணிக்கு பிறகு ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜ முன்னிலை பெறத் தொடங்கியது.
அதன் பின்னர், அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜவே தொடர்ந்து முன்னிலை வகித்தது. அதன்படி, பகல் 12 மணி நிலவரப்படி, பாஜ 168 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 82 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க 148 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜ வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜ ஆட்சி அமைக்க உள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜ அலுவலகங்களில் இனிப்புகள் பரிமாறி பாஜ கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, பாஜ 180க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மாநில தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்த நிலையில், அதே சமயம் வாக்கு எண்ணிக்கையில் இன்னும் 20க்கும் மேற்பட்ட சுற்றுகள் இருப்பதால் நிலைமை மாறும் என திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் நட்சத்திர தொகுதியான பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி முதலில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ மாநில தலைவர் சுவேந்து அதிகாரி முன்னிலை வகித்தார். ஆனால் அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் மம்தா முன்னிலை பெற்றார். நண்பகல் 12 மணி நிலவரப்படி மம்தா 25,942 வாக்குகளுடன் சுவேந்து அதிகாரியை விட 16,706 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.
English Summary
BJP Set to Capture Power in West Bengal for the First Time