இன்னும் 10 நாள் தான் டைம்... தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக நயினார் நாகேந்திரன்!
BJP Nayinar nakendran condemn to DMK Govt MK Stalin Athikadavu scheme issue
கொங்கு மண்டலத்திற்கு பெரும் பலனளிக்கும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைத் திமுக அரசு இன்னும் பத்து நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் பாஜக சார்பாக மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலத்துநயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அரை நூற்றாண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தொடர் போராட்டத்தின் விளைவாக ஓராண்டுக்கு முன்பு பெயருக்கு செயல்படுத்திவிட்டு, பின்பு அதிலும் பல குளறுபடிகளை உட்புகுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.
முந்தைய அதிமுக ஆட்சியிலேயே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பெரும்பான்மையான பணிகள் நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகளை சரியாக செயல்படுத்தாது இத்திட்டத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டு ஆன பின்பும், இன்னும் பெருவாரியான குளம் குட்டைகளில் நீர் நிரப்பப்படவில்லை என்பது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது. திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம் குட்டைகளையும் இரண்டாம் கட்டமாக இணைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையையும் கண்டுகொள்ளாதிருப்பது இத்திட்டத்தில் திமுக அரசுக்கு துளியும் அக்கறையில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்ததாலேயே திமுக அரசு திட்டத்தைத் தொடக்கி வைத்தது என்பது உலகறிந்த உண்மை. இன்னும் எத்தனை போராட்டங்களை பாஜக முன்னெடுத்தால் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவம் விடியா அரசின் விழிகளுக்குப் புலப்படும்? போராடினால் மட்டும் தான் திராவிட மாடல் அரசு தனது கடமையை முறையாகச் செய்ய முன்வருமா?
திமுக அரசின் ஆட்சி முடிவதற்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் பத்து நாட்களுக்குள் அத்திக்கடவு-அவினாசித் திட்டம் சரிவர செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், முன்னாள் மாநிலத் தலைவரும் சகோதரருமான திரு. அண்ணாமலை அவர்கள் அறிவித்தபடி தமிழக பாஜக சார்பாக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இனிமேலும் காலந்தாழ்த்தி கொங்கு மண்டல மக்களை வதைக்காது அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தமிழக பாஜகவின் தீவிர நிலைப்பாட்டை கவனத்தில் கொண்டு உடனடியாக இத்திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும் என இறுதிகட்ட எச்சரிக்கையாக திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Nayinar nakendran condemn to DMK Govt MK Stalin Athikadavu scheme issue