3,500 கோடி ரூபாய் ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: லஞ்சப் பணத்தை ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கியமை அம்பலம்..!
In Andhra Pradesh bribe money was given as salary to employees in the Rs 3500 crore liquor scam case
ஆந்திராவில், 3,500 கோடி ரூபாய் மதுபான ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் மற்றும் கடைநிலை ஊழியர் மூலம் லஞ்சப் பணம் கை மாறியுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு 2019 -24 மே வரை, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆட்சி செய்தார். அப்போது, தனியாரிடம் இருந்த மதுக்கடைகள், ஆந்திர பிரதேச மதுபானக் கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
அத்துடன், பிரபலமில்லாத தனியார் மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதன் மூலம், 3,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டது.

இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், முன்னாள் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிகவும் நெக்கமானவரான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், லோக்சபா எம்.பி., பி.வி.மிதுன் ரெட்டி உட்பட பலரை கைது செய்தனர்.
டாஸ்மாக்கில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில், மதுபான ஊழல் தொடர்பாக, விஜயவாடா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில், அலுவலக உதவியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களாக பணிபுரியும் நபர்கள் மூலம் லஞ்சப் பணத்தை கைமாற்றி உள்ளதாகவும், இந்த நபர்கள், நெட்வொர்க் கும்பலுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் சட்ட விரோத பணத்தை டிபாசிட் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், லஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை, தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் சம்பளமாகவும் வழங்கியுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அலுவலக உதவியாளர் மற்றும் கடைநிலை ஊழியர்களின் வங்கிக் கணக்கிலும் லஞ்சப் பணத்தை டிபாசிட் செய்த குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அதை தங்களது கூட்டாளிகளுக்கு அனுப்பும்படியும் கட்டாயப்படுத்தி உள்ளதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் துணை குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
In Andhra Pradesh bribe money was given as salary to employees in the Rs 3500 crore liquor scam case