துண்டான இரண்டு விரல்கள்! வெடித்தது வெடியா? நாட்டு வெடிகுண்டா? சந்தேகம் எழுப்பும் பாஜக!
BJP Narayanan Thirupathy Condemn to TNGovt DMK Student
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 12ம் தேதியன்று தூத்துக்குடியில் உள்ள அரசு பல்தொழில் நுட்பக்கல்லூரியில் (Polytechnic) வகுப்பறையில் மாணவர் ஒருவரின் பையில் இருந்த 'வெடி'(?) ஒன்று வெடித்ததில் சக மாணவர் இருவரை தாக்கியதில் ஒரு மாணவனுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதோடு, இரண்டு விரல்கள் துண்டாகியதாகவும், மற்றொரு மாணவனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், கைகள் செயலிழந்து போய் விட்டது என்றும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டபோது அவர் "மகனின் உடலை வைத்து வியாபாரம் செய்கிறீர்களா?" என்று கேட்கிறார் என்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தூத்துக்குடி காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள், வெடித்தது நாட்டு வெடி குண்டு அல்ல பட்டாசு தான் என்று கூறியிருப்பது மேலும் குழப்பத்தை வரவழைக்கிறது. அதெப்படி பைக்குள் இருந்த பட்டாசு வெடித்து இரண்டு விரல்கள் துண்டாகிப் போகும் என்பது புரியவில்லை.
மேலும் அந்த வகுப்பறையில் சிந்தியிருந்த மாணவனை ரத்தத்தை பார்க்கையில் இது சாதாரண பட்டாசாக இருக்குமா என்ற சந்தேகத்தை அந்த மாணவனின் தாயார் எழுப்புவதில் வியப்பில்லை, அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்திருக்கிற நிலையில் இதற்கு பொறுப்பேற்க போவது யார்? அந்த மாணவனின் இழப்புக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? கள்ளச்சாராய மரணங்களுக்கு இழப்பீடு அளிக்கும் அரசு, ஒரு மாணவனின் வாழ்க்கையில் நடந்துள்ள சோகத்திற்கு இழப்பீடு அளிக்க முன் வரவேண்டும். அதே போல் அந்த மாணவனுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதோடு, அரசு வேலையை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் உண்மையில் அப்படி பேசினாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், சம்பவம் மதியம் நடந்துள்ள நிலையில், கல்லூரி முதல்வர் சுமார் நான்கு மணிக்கு புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ள காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில், வெடித்தது 'வான வேடிக்கை வெடி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது. ஆனால்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேசுகையில் தடயவியல் துறை சோதனைக்கு பின்னர் தான் இது பட்டாசு என்று உறுதிப்படுத்தியதாக சொல்கிறார்.
உண்மையில் வெடித்தது சாதாரண பட்டாசா, நாட்டு வெடிகுண்டா என்பதையும், நாட்டு வெடிகுண்டு என்றால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் அல்லது எதற்காக நாட்டு வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது என்பதையெல்லாம் சந்தேகமற காவல் துறை விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.
மாநில கல்வித்துறையின் அலட்சியத்தால் தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆகையால் இதற்கு கல்வித்துறை எடுத்துள்ள நடவடிக்கைள் என்ன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to TNGovt DMK Student