திமுகவின் அராஜக அத்துமீறலும், அடக்குமுறை அரசியலும் வெகுவிரைவில் முடிவுக்கு வரும் - சவுக்கு சங்கருக்காக குரல் கொடுத்த ஹெச்.ராஜா!
BJP H Raja Condemn to DMK Mk Stalin savukku arrest issue
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "யூடியூபர் சவுக்கு சங்கரின் செயல்பாடுகள் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. அதே நேரத்தில் கடப்பாரை கொண்டு அவரது வீட்டின் கதவை உடைத்து அவரை தமிழக காவல்துறை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுக அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஊழல் நிர்வாகத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்களை அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கும் செயல் ஜனநாயகத்திற்கு பேராபத்து என்பதே உண்மை.
திமுகவின் ஊழல்கள் குறித்தும் அதிகார அத்துமீறல்கள் குறித்தும் உண்மைகளை உரக்கக் கூறும் பாஜகவினர் மற்றும் இந்து இயக்கத்தினர் மீதும் திமுக அரசு தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்வது உச்சகட்ட அராஜகத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.
இன்னொரு பக்கம் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் திமுகவின் ஊடக ஊதுகுழல்களுக்கும், பாஜக மறறும் இந்து இயக்கங்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பி வரும் யூடியூபர்களுக்கும் திமுக பாராட்டுப் பத்திரம் வாசித்து அவர்களை உத்தமர்கள் போல சித்தரித்து ஊரார் முன்னிலையில் புகழாரம் சூட்டி மகிழ்வதும் தொன்று தொட்டு நடந்தேறி வருகிற அருவெறுக்கத்தக்க அரசியல் நிகழ்வுகளாகவே இன்று வரையிலும் அரங்கேறி வருகிறது.
திமுகவிற்கு எதிரானவர்களை கைது செய்வதில் தமிழக காவல்துறை காட்டுகிற அக்கறையில் ஒரு சதவீதம் கூட ஓராண்டிற்கும் மேலாக தலைமறைவாக இருந்த கரூர் அசோக்குமாரை அதாவது பாட்டிலுக்கு பத்து ரூபாய் புகழ் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடன்பிறந்த தம்பியை தேடிக்கண்டுபிடித்து கைது செய்வதில் ஏன் காட்டவில்லை என்கிற கேள்விக்கு மட்டும் பதிலளிக்க காவல்துறை தயாராக இல்லை.
நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் தமிழகத்தில் அன்றாட நிகழ்வுகள் போல அனுதினமும் அரங்கேறி வருகின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும், தொடர் படுகொலைகளையும் தடுக்கவோ அல்லது அவை இனியும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு அடிப்படை காரணியாகவும், காரணமாகவும் விளங்குகின்ற போதைப்பொருள் பரவலாக்கலையும், பயன்பாட்டையும் அறவே ஒழிக்க நடவடிக்கை எடுப்பதிலும் தமிழக காவல்துறை கவனம் செலுத்தாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க திமுகவின் அதிகார அத்துமீறலை கண்டித்து குரல் கொடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திமுக தலைவர்களை திருப்திப்படுத்துவதில் ஆர்வம் செலுத்துவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறது.
திமுகவின் அராஜக அத்துமீறலும், அடக்குமுறை அரசியலும் வெகுவிரைவில் முடிவுக்கு வரும். விநாசகாலே விபரீதி புத்தி என்பது திமுகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளின் மூலம் தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP H Raja Condemn to DMK Mk Stalin savukku arrest issue