நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை; உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!
A public interest litigation has been filed in the Supreme Court demanding action against those spreading defamation against Justice Swaminathan
மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற அனுபதி வழங்கும் படி, மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் விசாரித்து, தீபத்தினில் விளக்கேற்ற உத்தரவிட்டார். ஆனால், அதை நிறைவேற்றாமல் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு - ஹிந்து அமைப்புகள் இடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. போதாதற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளது. இதனையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும், ஹிந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட, 56 நீதிபதிகள் ஒன்றிணைந்து நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் அவர், கூறியிருப்பதாவது:

''நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட ஆளும் திமுக ஆதரவு கட்சிகளைச் சேர்ந்த தனிநபர்கள், சில வழக்கறிஞர்களுடன் சேர்ந்து, பொது இடங்களில் சட்டவிரோதமான மற்றும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்களை நடத்தினர். நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசும், போலீசாரும் தவறிவிட்டனர்.
இது போன்ற செயல்களுக்குப் பொறுப்பான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A public interest litigation has been filed in the Supreme Court demanding action against those spreading defamation against Justice Swaminathan