கொங்கில் பெரிய சறுக்கல்! தெற்கில் அதிமுகவுக்கு செம அடி! வடக்கில் கை கொடுத்த வன்னியர் வாக்குகள்!
Big swing in Kongu A big blow to AIADMK in the south Vanniyar votes in the north
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், ஆட்சியை இழந்ததோடு மட்டுமல்லாமல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுக, ஏறக்குறைய 50 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது அரசியல் இருப்பை முழுமையாக இழக்காமல் தக்க வைத்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் அதிமுகவின் பாரம்பரிய பலமான கொங்கு மண்டலம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. பல முக்கிய தொகுதிகளில் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. தென் மாவட்டங்களிலும் முக்குலத்தோர் வாக்குகள் முழுமையாக அதிமுக பக்கம் திரளவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், வடதமிழகத்தில் அதிமுக முற்றிலும் சரிந்து போகவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் வன்னியர் வாக்கு வங்கி பார்க்கப்படுகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பாமக கொண்டுள்ள சமூக ஆதரவு, அதிமுகவுக்கு பல இடங்களில் உயிர்காக்கியாக அமைந்ததாக தேர்தல் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
திருத்தணி, செய்யாறு, மதுராந்தகம், ஆற்காடு, ஜோலார்பேட்டை, பாலக்கோடு, அரூர், செங்கம், ஆரணி, மயிலம் உள்ளிட்ட பல தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற பாமகவின் கோர் வாக்குகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழக அலை மாநிலம் முழுவதும் வீசியபோதும், வடதமிழகத்தின் சில பகுதிகளில் அந்த தாக்கத்தை கட்டுப்படுத்தியது வன்னியர் வாக்கு ஒருங்கிணைப்பே என கூறப்படுகிறது. குறிப்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எடுத்த அணுகுமுறை இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் தனித்த அரசியல் பாதை குறித்து பேசப்பட்டாலும், இந்தத் தேர்தலில் வாக்குகள் சிதறாமல் இருக்க அன்புமணி எடுத்த முயற்சிகள் அதிமுகவுக்கு பலனளித்ததாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதன் மூலம், தமிழக அரசியலில் பாமகவின் வாக்கு வங்கி இன்னும் தாக்கம் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு முழுமையான வெற்றியை அளிக்கவில்லை என்றாலும், வடதமிழகத்தில் பாமக கூட்டணி அளித்த ஆதரவு கட்சியை முழுமையான சரிவிலிருந்து காப்பாற்றியதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
மொத்தத்தில், 2026 தேர்தல் தமிழக அரசியலில் புதிய சக்திகளின் எழுச்சியை வெளிப்படுத்தியதோடு, சமூக அடிப்படையிலான வாக்கு வங்கிகள் இன்னும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
English Summary
Big swing in Kongu A big blow to AIADMK in the south Vanniyar votes in the north